ஓசூர் வனக்கோட்டத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு விரைவில் முடிவு அறிவிப்பு

கிருஷ்ணகிரி, மே 22: ஓசூர் வனக்கோட்டத்தில் 3 நாட்கள் நடந்த யானைகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,501 சதுர கி.மீ., பரப்பளவுள்ள ஓசூர் வனக்கோட்டத்தில் 1,190 சதுர கி.மீ., காவிரி வடக்கு மற்றும் தெற்கு வன உயிரின சரணாலயங்கள் அமைந்துள்ளன. இதில் 468 வகையான தாவரங்கள், 36 வகையான பாலூட்டிகள், 272 வகையான பறவை இனங்கள், 172 வகை வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. அத்துடன், தேக்கு, ஈட்டி, சந்தனம், ஜாலாரி, உசில், ஆச்சான் மற்றும் பொருசு மர வகைகளும், யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், புள்ளி மான்கள், கடமான், கரடிகள், மயில்கள், எறும்புத் தின்னிகள், அரியவகை விலங்ககுளான சாம்பல் நிலை அணில்கள், எகிப்திய கழுகுகளும் உள்ளன. ஓசூர் வனக்கோட்டத்தில், காவிரி வடக்கு, தெற்கு வன உயிரின சரணாலயங்களில் அதிக எண்ணிக்கையில் யானைகள் உள்ளன.
குறிப்பாக ஊடேதுர்க்கம், சானமாவு, நொகனூர், அய்யூர், ஜவளகிரி, பனை, உளிபண்டா, மகாராஜகடை, வேப்பனஹள்ளி, உடுபுராணி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு, உரிகம், தக்கட்டி, கெஸ்தூர், மல்லஹள்ளி பகுதியில் ஏராளமான யானைகள் தற்போது முகாமிட்டுள்ளன. கடந்த 2017ம் ஆண்டு நடந்த ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பில், ஓசூர் வனக்கோட்டத்தில் மொத்தம் 499 யானைகள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டு தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி கடந்த 17ம் தேதி துவங்கி 19ம் தேதி வரை என மூன்று நாட்கள் நடந்தது.  ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள 40 வனக்காவல் சுற்று பீட்டுகளில், ஓசூர் கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், வன அலுவலர்கள் உதவியுடன், காவிரி வடக்கு, தெற்கு வன உயிரின சரணாலயங்களில், யானைகள் கணக்கெடுப்பு பணி நடத்த திட்டமிடப்பட்டு, பணிகள் நடந்தது.
முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து வந்த உயிரியலாளர் சக்திவேல் மூலம், ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தலைமையில், உதவி வனப்பாதுகாவலர் ராஜமாரியப்பன், வனச்சரக அலுவலர்கள், வனப்பணியாளர்களுக்கு, ஓசூர் மாவட்ட வன அலுவலகத்தில் கணக்கெடுப்பு எடுப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பணியில் ஈடுபடுபவர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கு வழிகாட்ட ஏதுவாக, வாட்ஸ் அப் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டு, முதலுதவி பெட்டிகள் வழங்கப்பட்டன. இந்த குழுவினர் மூன்று நாட்கள் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அவ்வாறு அவர்கள் எடுத்த கணக்கெடுப்பை, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன் முடிவு விரைவில் தெரியும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஓசூர் வனக்கோட்டத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு விரைவில் முடிவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: