பவானி கூடுதுறை பிரிவில் இரும்பு குழாய் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

பவானி,மே22: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு இரும்பு பைப்களை ஏற்றிக் கொண்டு நேற்று மாலை ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. பவானி – ஈரோடு ரோட்டில் கூடுதுறை பிரிவு அருகே வளைவில் லாரி திரும்பியபோது எதிர்பாராமல் பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதனால், லாரியில் அடுக்கப்பட்டிருந்த இரும்பு பைப்புகள் ரோட்டில் விழுந்தன. மேலும், ரோட்டோரத்தில் இருந்த கடைகளில் முன்பகுதியிலும் பைப்புகள் விழுந்தன. இதனால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு நீண்ட தொலைவுக்கு இருபுறமும் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இவ்விபத்தில், மதுரையைச் சேர்ந்த லாரி டிரைவர் வெடிமுத்து (30), கிளீனர் பெருமாள் (36) ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும், பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு உழவாரப் பணிக்கு தனது மகள் சாதனாவுடன் வந்திருந்த குமாரபாளையத்தை சேர்ந்த எழில்ராஜ் (41) தனது பைக்கை ரோட்டோரத்தில் நிறுத்திவிட்டு, அருகாமையில் உள்ள கடைக்குள் சென்றுவிட்டார்.

அப்போது, லாரி கவிழ்ந்ததால் பைக் மீது இரும்பு பைப்புகள் விழுந்து மூடியது. அதிஷ்டவசமாக கடைக்குள் தந்தையும் மகளும் சென்றதால் இவ்விபத்தில் உயிர் தப்பினர். இதனைத் தொடர்ந்து, இரண்டு ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னரே போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதுகுறித்து, பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post பவானி கூடுதுறை பிரிவில் இரும்பு குழாய் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Related Stories: