புதிதாக வாங்கிய பைக்கில் பிரேக் டிஸ்க் அடிக்கடி பழுதானதால் ₹1.95 லட்சம் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

செங்கல்பட்டு, மே 20: சென்னை அடுத்த படப்பை பகுதியைச் சேர்ந்தவர் அனிதா மேரி. இவர், கடந்த 2019ம் ஆண்டு சென்னை அம்பத்தூரில் உள்ள எஸ்விசி மோட்டார்ஸ் எனும் வாகன விற்பனை கடையில் பிரபல நிறுவனத்தின் பைக் ஒன்றினை சுமார் ₹80 ஆயிரம் கொடுத்து வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து, அனிதா மேரி வாங்கிய இருசக்கர வாகனம் 3 மாதத்தில் டிஸ்க் பிரேக் பழுதாகி உள்ளது. இது குறித்து வாகனம் வாங்கிய இடத்தில் புகார் அளித்துள்ளார். அதற்கு வாகன விற்பனையாளர் பிரபல தனியார் நிறுவன சர்வீஸ் சென்டரில் வாகனத்தை பழுது பார்க்குமாறு கூறியுள்ளனர். இதனால் அனிதா மேரி, சர்வீஸ் சென்டருக்கு சென்று பிரேக் டிஸ்க்கை மாற்றி உள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து 3 முறைக்கும் மேல் பிரேக் டிஸ்க் பழுதானதால் அனிதா மேரி மன உளைச்சலுக்குள்ளாகினார். எனவே, செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அதே ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் காசி பாண்டியன் மற்றும் உறுப்பினர் ஜவகர் ஆகியோர் பாதிக்கப்பட்ட அனிதா மேரிக்கு வாகனத்தை விற்பனை செய்த எஸ்விசி மோட்டார்ஸ், சர்வீஸ் சென்டர், வாகன உற்பத்தி தொழிற்சாலை ஆகிய மூவரும் சேர்ந்து வாகனத்தின் முழு தொகை ₹80 ஆயிரம், நுகர்வோருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ₹1 லட்சம் மற்றும் வழக்கு செலவிற்காக ₹15 ஆயிரம் என மொத்தம் ₹1 லட்சத்து 95 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.

The post புதிதாக வாங்கிய பைக்கில் பிரேக் டிஸ்க் அடிக்கடி பழுதானதால் ₹1.95 லட்சம் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: