மாணவர்களுக்கு சான்றுகள் வழங்க காலதாமதம் துணை வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர் மீது புகார்

பள்ளிப்பட்டு, மே 20: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், வருவாய் சான்றுகள் வழங்க காலதாமதம் ஏற்படுத்துவதாக துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மீது விவசாய சங்கம் சார்பில் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டத்தை சேர்ந்த கல்லூரி, பள்ளி மாணவர்கள் அவசர தேவைக்காக ஜாதி, இருப்பிடம், வருவாய் சான்று கோரி இணையதளம் வழியாக பதிவு செய்து காத்திருக்கின்றனர். இருப்பினும் பொதட்டூர்பேட்டை வருவாய் ஆய்வாளர் ராமு, பள்ளிப்பட்டு துணை வட்டாட்சியர் சேகர் ஆகியோர் முறையாக விசாரணை நடத்தாமல், மனுக்கள் மீது தொடர்ந்து காலதாமதப்படுத்தி பொதுமக்களை அலைக்கழிக்கின்றனர். இதனால் உரிய நேரத்தில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் ஹஸ்ரத் பேகம் தலைமையில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் நலம் காக்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட விவசாயிகள் சங்கத்தலைவர் வேணுகோபால், விவசாயிகள் சங்கம் மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணி ஆகியோர் கோட்டாட்சியரிடம் புகார் மனுக்கள் வழங்கினர். அம்மனுவில் வருவாய் ஆய்வாளர் ராமு, துணை வட்டட்சியர் சேகர் ஆகியோர் திட்டமிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், வருவாய் சான்றுகள் வழங்குவதில் காலதாதம் செய்து வருகின்றனர். பெரும்பாலான விண்ணப்பங்களை நிராகரிப்பதில் குறியாக உள்ளனர். இணையதளத்தில் அனைத்து பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் நேரடியாக சந்திக்க வேண்டும் என்றும், தனியாக வீடு வாடகைக்கு எடுத்துக்கொண்டு அந்த வீடுகளுக்கு பெண்கள், பொதுமக்களை வரவைத்து கையூட்டு பெற்று வருவதாக புகார் மனுவில் குறிப்பிட்டனர். பொதுமக்களை அலைக்கழித்து பணியில் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

The post மாணவர்களுக்கு சான்றுகள் வழங்க காலதாமதம் துணை வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர் மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: