திருப்புகலூர் அப்பர் ஐக்கிய விழாவும், காரைக்குடி கொப்புடை அம்மன் திருத்தேர் விழாவும்

சைவம் வளர்த்த பெரியோர்களை நாயன்மார்கள் என்று போற்றுவார்கள். அதே நேரத்தில் சைவத்தினுடைய திருமுறைகளில் மிகவும் முக்கியமான தேவாரத்தைப் பாடியவர்களை தேவார மூவர்கள் என்று சொல்லுவார்கள். மாணிக்கவாசகரையும் சேர்த்து சமயக்குரவர்கள் நால்வர் என்று சொல்லப் படும் மரபு உண்டு. ஆனால் எந்த வகையில், எப்படிச் சொல்லப் பட்டாலும் அதில் ஒருவராக வந்து விடுபவர் அப்பர் என்று அன்புடன் அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனார். இவருக்கு பல பெயர்கள் உண்டு.

மருள் நீக்கியார் என்பது இவருடைய இயற்பெயர். சமண சமயத்தைச் சார்ந்து இருந்தபோது இவருக்கு தர்ம சேனர் என்று பெயர். தேவாரத் தமிழை தம் திருவாக்கால் தந்ததால் நாவுக்கரசர். திருஞானசம்பந்தர் இவரை அன்போடு அழைத்த பெயர் அப்பர். எல்லா ஆலயங்களிலும் உழவாரப் பணியை தலைமேல் கொண்டு செய் ததால் உழவாரத் தொண்டர். செய்யுளில் தாண்டக வகையைப் பாடிய தால் தாண்டக வேந்தர் என்றும் இவரை புலவர்கள் அழைப்பார்கள். திருநாவுக்கரசர் நடுநாட்டில் திருவாமூர் என்னும் ஊரில் அவதரித்தவர். இந்த ஊர் கடலூருக்கு பக்கத்தில் பண்ருட்டி செல்லும் பாதையில் அமைந் திருக்கிறது.

இவருடைய தமக்கையார் திலகவதியார் மிகச் சிறந்த சிவபக்தர். இவர் சைவ சமயத்தை விட்டு சமண சமயத்தைத் தழுவிய போது திலகவதியார் சிவபெருமானிடம் அடைக்கலம் வேண்டினார். திருநாவுக்கரசருக்கு வயிற்றில் சூலை நோய் தந்து சிவபெருமான் தடுத்தாட் கொண்டார். இவருடைய அற்புதமான வாக்கு அனைவரும் பின்பற்ற வேண்டியது.

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே.

“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்பது திருநாவுக்கரசர் சொன்ன பொன்மொழி. சிவாலயங்களுக்கு சென்று தேவாரப்பதிகங்களை பாடிய திருநாவுக்கரசர் வாழ்க்கை அற்புதமானது. பல அருமையான சம்பவங்கள் கொண்டது. குறிப்பாக இவரை சமணர்களால் ஏழு நாட்கள் சுண்ணாம்பு காளவாயில் வைத்தார்கள். அப்பொழுது அவர் சிவநாமத்தை ஜெபித்து அதிலிருந்து வெளிவந்தார்.

மாசில் வீணையும்மாலை மதியமும்
வீசு தென்றலும்வீங்கிள வேனிலும்
மூசு வண்டறைபொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

என்றபடி ஈசன் இவருக்கு திருவடி நிழல் தந்தார். அதற்குப் பிறகு நஞ்சு கலந்த பால் சோற்றை தந்து கொலை செய்ய முயன்றனர். கல்லோடு சேர்த்து கடலில் கட்டி அவரை எறிந்த பொழுதும் அந்தக் கல்லே தோணி ஆகியது. அவர் கரையேறிய இடம் கரையேற விட்ட குப்பம் என்ற பெயரில் கடலூருக்கு அருகே உள்ளது. அப்பொழுது அவர் பாடிய பாடல்தான் இது.

சொற்றுணை வேதியன்சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக்கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர்கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

சிவபெருமானிடம் பாடி படிக்காசு பெற்றவர். இவர் பாடியவுடன் திறக்காமல் இருந்த வேதாரண்யம் கோயிலின் கதவுகள் திறந்தன. இவரைத் தலைவராக கொண்ட அப்பூதியடிகளையும் நாயன்மார்கள் கணக்கில் சேர்த்தனர். அவர் குழந்தை பாம்பு தீண்டி இறந்தபோது ஒன்று கொலாம் பதிகம் பாடி உயிர்ப்பித்தார் இது நடந்தது திங்களூர் என்னும் திருத்தலத்தில். திருவையாறில் அவர் கயிலைக் காட்சியைப் பெற்றார். இசைத் திறன் மிகுந்த திருநாவுக்கரசர் பாடிய பல பண்கள் அற்புதமானது. அவர் ஐக்கி யமாகிய இடம் திருமருகல் அருகே திருப்புகலூர். வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான அக்னீஸ்வரர் கோயிலில் அப்பர் ஐக்கிய திருவிழா இன்று நடைபெறுகிறது.

புன்னை மரமாகித் திருமாலே வாசம் செய்தவதும் இங்குதான். திருநாவுக்கரசர் ஒளிவடிவாகி ஈசனோடு கலந்த தலமும் இதுதான். இப்படிப் பல்வேறு சிறப்புகளுடன் தேவரும், முனிவரும், அடியாரும் ஈசனைப் புகல் அடையும் (சரண் புகும்) ஊர் திருப்புகலூர். முருகநாயனார் அவதரித்ததும், அவர் நந்தவனம் அமைத்து ஸ்ரீவர்த்தமானீஸ் வரருக்குத் தம் வாழ்நாள் முழுவதும் புஷ்பத் தொண்டு புரிந்ததும் இத்தலத்தில்தான். இந்தத் திருத்தலத்திற்கு வந்த அப்பரடிகள், சுந்தரர், சம்பந்தர், திருநீலநக்கர், சிறுதொண்டர், திருநீலகண்டயாழ்ப்பாணர் ஆகியோரைச் சந்தித்து அளவளாவிய சிறப்பைப் பெற்றவர் முருகநாயனார்.

நெற்குன்றவாணர் என்ற அன்பர் இத்தலத்து ஈசன் மீது `புகலூர் திரிபந்தாதி’ என்ற அரிய இலக்கிய நூலைப் படைத்துள்ளார். அக்னி பகவானுக்குத் தனிச் சந்நதி, நளனுக்கு அனுக்கிரகம் செய்த சனிபகவான் சந்நதி ஆகியன இருக்கும் க்ஷேத்திரம் இது. அவர் சிவனோடு ஐக்கியமான சதய நட்சத்திரத்தன்று பல்வேறு திருத்தலங் களில் திருநாவுக்கரசர் நாயனாரின் குருபூஜை விழாவும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

கொப்புடை அம்மன் கோயில் தேர் விழா 16.5.2023 – செவ்வாய்க்கிழமை

காரைக்குடி கொப்புடை அம்மன் கோயில் என்பது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள அம்மன் கோயில் ஆகும். இத்தலத்தின் மூலவராகவும், உற்சவராகவும் கொப்புடை நாயகி அம்மன் அமைக்கப் பட்டுள்ளார். இத்தலமானது பழமை வாய்ந்தது. கொப்புடை அம்மன் கோயில், தென்னிந்திய பக்தர்களிடையே புகழ்பெற்று விளங்குகிறது.

காரைக்குடியின் புறநகரப் பகுதியாக தற்போது இருக்கும் செஞ்சை என்ற இடம் முன்பு காட்டுப்பகுதியாக இருந்தது. இந்த செஞ்சை காட்டுப்பகுதியில் காட்டம்மன் கோயில் உள்ளது. காட்டம்மனும் கொப்புடையம்மனும் சகோதரிகள் ஆவர். காட்டம்மனின் தங்கையே கொப்புடையம்மன். கொப்புடையம்மனுக்கு பிள்ளைகள் இல்லை எனவும் காட்டம்மனுக்கு ஏழு பிள்ளைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தன் மூத்த தமக்கையின் பிள்ளைகளைப் பார்க்க கொப்புடையம்மன் வரும்போது கொழுக்கட்டை முதலான உணவுப் பண்டங்களை தானே செய்து குழந்தைகளுக்கு கொடுக்க எடுத்து வருவாரென்றும் காட்டம்மன் மலடியான தன் தங்கை தன்னுடைய பிள்ளைகளை பார்க்கக் கூடாது என்று நினைத்து பிள்ளைகளை ஒளித்து வைப்பாரென்றும் கூறப்படுகிறது.

இதனை அறிந்த தங்கை கொப்புடையம்மன் ஒளித்து வைத்த பிள்ளைகளை கல்லாக்கிவிட்டு பின்னர் அங்கிருந்து கோபத்தோடு காரைக்குடி வந்து தெய்வமாகிவிட்டாள் என்றும் இக்கோயிலின் தல வரலாறு தெரிவிக்கிறது. சிவன் தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தான் மூலவரும் உற்சவரும் ஒன்றாக இருக்கும். அதேபோல் அம்மன் தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாக இருப்பது காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயிலில் ஆகும். பொதுவாக காளி, துர்கை போன்ற உக்கிர தெய்வங்கள் வடக்கு நோக்கித்தான் இருப்பார்கள்.

ஆனால் இங்கு அம்பாள் கிழக்கு நோக்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி அமைக்கப்பட்டிருக்கிறார். தோல் நோய்கள், குழந்தைப் பேறு இல்லாமை போன்ற குறைபாடுகளினால் அவதிப்படுவோர், மற்றும் மண வாழ்வில் பல பிரச்னைகளைச் சந்திப்போர் போன்றவர்கள் இங்கு வருகிறார்கள். உடல்நலக் குறைவினால் அவதிப்படுவோர், இங்கு வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர்.

பூரண நம்பிக்கை கொண்டு இங்கு வருவோரின் குறைகள் யாவும் நிவர்த்தியடைகிறது என்பது நம்பிக்கை. சிறு வியாபாரிகள் முதல் வர்த்தகப் பிரமுகர்கள் வரை புதிதாகத் தொழில் தொடங்கினாலோ, தொழில் அபிவிருத்தி வேண்டு மென்றாலோ இந்தக் கொப்புடை அம்மனைத்தான் வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர். சித்திரை மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை `செவ்வாய்ப் பெருந்திருவிழா’ தொடங்கி வைகாசி மாதம் முதல் வாரம் முடிய 10 நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சித்திரை மாதத்தில் நான்கு செவ்வாய்க்கிழமை வந்தால் அதில் இரண்டாவது செவ்வாய்க் கிழமையும், ஐந்து செவ்வாய்க்கிழமை வந்தால் அதில் மூன்றாவது செவ்வாய்க்கிழமையும் கொப்புடையம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெறும். சித்திரை ஆண்டுப் பிறப்பு, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஆடிச் செவ்வாய், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, பங்குனி தாராபிஷேகம் ஆகியன இக்கோயிலின் சிறப்பான திருவிழா ஆகும். வாரத்தின் ஒவ்வொரு ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

இக்கோயில் காலை 6 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். தற்சமயம் இந்த ஆலயத்தில் வருடாந்திர பெருவிழா நடைபெற்று வருகிறது. அதில் இன்று (16.5.2023) தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெறும்.

தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்

The post திருப்புகலூர் அப்பர் ஐக்கிய விழாவும், காரைக்குடி கொப்புடை அம்மன் திருத்தேர் விழாவும் appeared first on Dinakaran.

Related Stories: