அருணகிரிநாதர் பிறந்த திருத்தலம்

முள்ளண்டிரம் – ஆரணி

அரும்பெருமை வாய்ந்த நம் முன்னோர்கள் சிவ வழிபாட்டையே தமது உயிர் மூச்சாகக் கொண்டிருந்தனர். அவர்கள் செய்த தொண்டிற்கு நிகராக தற்காலத்தில் நாம் செய்ய முடியாத போதிலும், புதிய ஆலயங்கள் கட்டுவதை விடுத்து, பழமைவாய்ந்த சிவாலயங்களையும், வைஷ்ணவ ஆலயங்களையும் சீர் தூக்குவதே சாலச் சிறந்ததாகும்.

அவ்வாறான பழமைமிக்க சிவாலயங்களை சீர் செய்தால், நம் தலைமுறைகள் சிறக்கும் என்பதோடு, நாமும் வாழ்த்தப்படுவோம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அவ்வகையில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில், பழமைவாய்ந்த முள்ளண்டிரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயம் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த ஊருக்கு ஒர் முக்கிய சிறப்புண்டு. அது யாதெனில், திருவண்ணாமலையில் முருகப் பெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்டு, திருப்புகழ் ஆசிரியராய் விளங்கிய அருணகிரிநாதர் பிறந்தது இந்த ஊரில்தான். சென்னை அரசு கையெழுத்துப்பிரதி நிலையத்தில் அருணகிரிநாதர் குறித்த குறிப்பு உள்ளது. சுமார் 100 ஸ்லோகங்களைக் கொண்ட ‘‘விபாகரத்த மாளிகை” என்னும் வடமொழி நூலில் அருணகிரிநாதர் முள்ளண்டிரத்து டிண்டிமக் கவிகளுல் ஒருவரெனக் கூறுகிறது. அதோடு, இவர் வாழ்ந்த காலம் 1400 – 1490 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இவ்வூருக்கு அருகில் ‘‘சோமநாதன் மடம்” என்று அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற ‘‘12 புத்தூர்” தலம் உள்ளது மேலும் ஒரு சான்றாக உள்ளது. கங்கைக் கரையில் வாழ்ந்த எட்டு கோத்திரத்தைச் சேர்ந்த அந்தணர்கள், கங்கையில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக தென்னாடு வர….. அவர்களை சோழர்கள் வரவேற்றனர்.

அவர்களுக்கு மெத்தப்பாடி, முள்ளண்டிரம், அத்தியூர் ஆகிய மூன்று அக்ரஹாரங்களை நிறுவி, அதை அவர்களுக்கு சர்வ மானியமாக [இனாமாக] அளித்தனர். அதில் ஆதியில் முல்லைவனமாகத் திகழ்ந்த முள்ளண்டிரத்தில் கௌதம கோத்திரத்தின் வழிவந்த இராஜநாதகவி – அபிராமிநாயகி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவரே சோணதரர். அவரே பின்னாளில் அருணகிரிநாதர் என அழைக்கப்பட்டார். இவர் இவ்வூரில் அன்னம், தண்ணீர், தூக்கமின்றி ஈசனிடம் மனம் லயித்தபடி தவம் கிடந்தார்.

இறைவன் தோன்றி, தமது வாயிலிருந்து தாம்பூலத்தை சோணதரர் வாயிலிட்டு மறைந்தார். அடுத்தகணமே அனைத்து கலைகளும் அத்துபடியானது அருணகிரிநாதருக்கு…! வடதிசை நோக்கி யாத்திரை சென்றார். தில்லியை ஆண்ட முகலாய மன்னன் இவரது கவித்திறமையைக் கண்டு மெச்சி, பல பரிசுகளைத் தந்ததோடு, ‘‘விந்திய டிண்டிமக்கவி” என்கிற பட்டத்தையும் வழங்கி கௌரவப்படுத்தினான்.

ஊர் திரும்பினார் சோணதரர். மன்னன் பிரபுடதேவராயன் இவருக்கு அளித்த நிலத்தை பண்படுத்தி உழும் வேளையில், ஏர்க்கலப்பையில் வெட்டுப்பட்டு, சுயம்பு லிங்கம் வெளிப்பட்டது. வெட்டுப்பட்டதன் காரணமாக வருந்தினாலும், ஈசன் தனது ஊரில் வெளியானதை நினைத்து, அவரை வணங்கி, வழிபட்டு மகிழ்ந்தார். இச்செய்தியை மன்னர்களிடம் தெரிவித்து, ஆலயம் எழுப்பி ஆனந்தம் அடைந்தார். இன்றும் இப்பதி சிவலிங்கத்தின் சிரசில் ஏர் கலப்பையால் உடைந்த பகுதி பளிச்சென தெரிகிறது.

அதோடு, தனது இஷ்ட தெய்வமான அருணாச்சலேஸ்வரர் – அபீதகுஜாம்பிகைக்கும் மன்னரின் துணையால் ஆலயம் எழுப்பி வழிபட்டுள்ளார் அருணகிரி வள்ளல். பின்னர் விதிவசத்தால் விலைமாதர்களை நாடி, அண்ணாமலையில் ஆறுமுகப் பெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டார். திருப்புகழ் மட்டுமின்றி, இவர் அருளிய பல அரிய நூல்களும் உண்டு. அவை, அருணாசலேஸ்வரர் கும்மி, பழங்கால நாட்டுப் பாடல்கள், சோமவல்லி யோகானந்த பிரஹசனம், கோதவர்ம யோக பூஷணம் ஆகியனவாகும்.

மகான் ஸ்ரீஅருணகிரிநாதரால் உருவான இவ்வாலயம், இன்று மண் சரிந்து, கட்டிடத்தின் கற்கள் தகர்ந்து, சிதைந்து கிடக்கிறது. இவ்வாலயத்தின் முக மண்டபத் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் காணக்கிடைக்காத பொக்கிஷங்களாக திகழ்கின்றன. கோயில் எதிரே அமைந்துள்ள திருக்குளம் மண்மூடி மறைத்துள்ளது.

அருணகிரிநாதரால் வெளிப்பட்டு, அரசர் காலத்தில் கோலோச்சிய இச்சிவாலயத்தை மீட்டு, திருப்பணிகளை முடித்து, குடமுழுக்கு நடத்திட, போதிய நிதியும், பொருளும், ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. புரவலர்கள் தங்கள் மேலான கைங்கரியத்தை இவ்வாலயத்திற்கு செய்து இவ்வீசன் ஆலயத்தை புத்தொளி வீசச் செய்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டுகின்றோம்.

திருப்பணி தொடர்புக்கு: ,திருப்பணிக்குழு, ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயம், அறக்கட்டளை, முள்ளண்டிரம் – 632 512. (வழி) – திமிரி, ஆரணி தாலுகா, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு.

தொகுப்பு: மோ.கணேஷ்

The post அருணகிரிநாதர் பிறந்த திருத்தலம் appeared first on Dinakaran.

Related Stories: