கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலைக்காக ராட்சத குழாய்கள் அமைக்கும் பணி தீவிரம்

சென்னை, மே 17: மாமல்லபுரம் அருகே கடல் நீரை குடிநீராக்கும் 3வது ஆலை அமையும் இடத்தில் ராட்சத குழாய்கள் அமைக்க சர்வே எடுக்கும் பணி நடக்கிறது. மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலைக்கு கடந்த 2010ம் ஆண்டு, துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த ஆலை கடந்த 2013ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இங்கு, நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு திருவான்மியூர், ஈச்சம்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்படுகிறது.

சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் கடந்த 2003-04ம் ஆண்டு தொலைநோக்கு திட்டமான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி மீஞ்சூரில் காட்டுப்பள்ளி, கிழக்கு கடற்கரை சாலையில் சூளேரிக்காடு என 2 இடங்களில் நாளொன்றுக்கு தலா 10 கோடி லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இந்த, இரு சுத்திகரிப்பு நிலையங்கள் சென்னையின் மொத்தக் குடிநீர் தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.

இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு முதலாவது ஆலைக்கு அருகே ஜெர்மன் நாட்டு நிதியுதவியுடன் ரூ.1260 கோடியில் 2வது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு, தினமும் 15 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கப்படும். இந்த, 2வது ஆலையில் சுத்திகரிப்பு செய்யப்படும் குடிநீர் பல்லாவரம், மேடவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, 2வது ஆலையின் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், 2வது ஆலைக்கு அருகே சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தால் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை நாட்டில் எங்கும் இல்லாதவகையில், பிரமாண்டமாக அமைய உள்ளது. அதற்காக, அங்கு ராட்சத குழாய்கள் பூமிக்கு அடியில் புதைக்க ஊழியர்கள் மூலம் சர்வே எடுக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இத்திட்டம், முழுமை பெற்றால் சென்னையில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை 70 சதவீதம் பூர்த்தி செய்யும் என சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்தனர்

The post கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலைக்காக ராட்சத குழாய்கள் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: