புதுடெல்லி: கர்நாடகாவில் முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கும் நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கரில் அறிமுகப்படுத்தப்பட்ட அதிகார பகிர்வு ‘பார்முலா’ தோற்றது. அதனால் மாநில தலைவர்களின் பிரச்னையை தீர்க்க முடியாமல் காங்கிரஸ் தவித்து வருகிறது. கர்நாடகாவில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, தற்போது முதல்வரைத் தேர்வு செய்வதில் பெரும் தலைவலியை சந்தித்துள்ளது. மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், மாநில தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே இழுபறி நிலவி வருகிறது. இரு தலைவர்களுக்கும் தலா 30 மாதம் முதல்வர் பதவியில் இருக்க அதிகார பகிர்வு யோசனை முன்வைக்கப்பட்டது.
இதனை டி.கே.சிவகுமாரும், சித்தராமையாவும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு சாட்சியாக காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்கள் உள்ளன. கடந்த 2018ல் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்தது. மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் பதவிக்கான போட்டியில் மூத்த தலைவர் கமல்நாத் – இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா இடையே போட்டி ஏற்பட்டது. ஒருவழியாக ஜோதிராதித்ய சிந்தியாவை கட்சித் தலைமை சமாதானப்படுத்தி வைத்தது. கமல்நாத் முதல்வராக பதவியேற்றார். ஆனால் அடுத்த சில மாதங்களில் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட மோதலால் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசில் இருந்து விலகி தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் சேர்ந்தார்.
இதனால் கமல்நாத்தின் ஆட்சி கவிழ்ந்தது. தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. ராஜஸ்தானை பொருத்தமட்டில் அப்போதைய தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியமைக்க காரணமாக இருக்க சச்சின் பைலட் இருந்தார். அவர் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். மூத்த தலைவரான அசோக் கெலாட், காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமானவர் என்பதால் அவருக்கு முதல்வர் பதவி கிடைத்தது. சச்சின் பைலட்டுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இரு தலைவர்களும் தலா இரண்டரை ஆண்டுகாலம் முதல்வராக இருக்கலாம் என்று அதிகார பகிர்வு முடிவும் செய்யப்பட்டது. ஆனால், அசோக் கெலாட்டின் ஆதரவாளர்கள் இந்த திட்டத்தை நிராகரித்தனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த 2022ல் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அசோக் கெலாட்டுக்கு எதிராக கொதித்து எழுந்தனர். தனது துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் ராஜினாமா செய்தார். இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியும், பிரியங்காவும் சச்சின் பைலட்டை சமாதான செய்ய முயன்றனர். ஆனால் அவர் தனது பதவி விலகலில் இருந்து பின்வாங்கவில்லை. அன்று தொடங்கிய பிரச்னை இன்றும் நீடிக்கிறது. தற்போது முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக பாதயாத்திரையில் சச்சின் பைலட் இறங்கியுள்ளார். ராஜஸ்தானில் போடப்பட்ட இரண்டரை ஆண்டு முதல்வர் பதவிக்கான அதிகார பகிர்வு திட்டம் போல், சட்டீஸ்கர் மாநிலத்திலும் போடப்பட்டது.
கட்சியின் மூத்த தலைவர்களான பூபேஷ் பாகேலுக்கும், டி.எஸ்.சிங் தியோவுக்கும் இடையே ஏற்பட்ட கடும் போட்டி நிலவியதால் அதிகார பகிர்வு யோசனை முன்வைக்கப்பட்டது. இதற்கிடையில், பூபேஷ் பாகல் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இரண்டரை ஆண்டு அதிகார பகிர்வு திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. அதனால் பூபேஷ் பாகேலுக்கும், சிங் தியோவுக்கும் இடையே மோதல்கள் நீடிக்கிறது. ஒருகட்டத்தில் சிங் தியோ தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார். இவர் முந்தைய பாஜக ஆட்சியின் போது அப்போதைய முதல்வர் ராமன் சிங்குக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார். மேற்கண்ட 3 மாநிலங்களிலும் இரண்டரை ஆண்டு அதிகார பகிர்வு பார்முலா ஒத்துவரவில்லை.
மத்திய பிரதேசத்தில் ஆட்சி பறிபோனது. ராஜஸ்தான், சட்டீஸ்கரில் இன்றும் உட்கட்சி பிரச்னை பெரும் தலைவலியாக காங்கிரசுக்கு உள்ளது. இந்த மாநிலங்களில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இப்படிபட்ட சூழலில் கர்நாடகாவிலும் முதல்வர் பதவிக்கான அதிகார பகிர்வு பார்முலா பேசப்படுவதால், அந்தத் திட்டம் எந்தளவிற்கு காங்கிரசுக்கு பலத்தை ஏற்படுத்தும் என்று கூறமுடியாது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில் காங்கிரசின் வசமுள்ள இந்த மாநிலங்களின் வெற்றி எவ்வாறு இருக்கும் என்பதும் கேள்வியாக உள்ளது.
The post கர்நாடகாவில் தொடரும் இழுபறி; ம.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கரில் அதிகார பகிர்வு ‘பார்முலா’ தோற்றது ஏன்?.. மாநில தலைவர்களின் பிரச்னையை தீர்க்க முடியாமல் தவிக்கும் காங்கிரஸ் appeared first on Dinakaran.
