சுற்றுலா பயணிகளின் ‘செல்பி’ ஸ்பாட்டாக மாறுகிறது கழுகுமலை சமணப்பள்ளி, வெட்டுவான் கோயில் சிறப்புகளை கூற வழிகாட்டி நியமிக்கப்படுவாரா?

கழுகுமலை, மே 16: கழுகுமலையில் அமைந்துள்ள தென்பழநி என்றழைக்கப்படும் கழுகாசலமூர்த்தி கோயில், பிரசித்திப் பெற்றது. மலையை குடைந்து அமைக்கப்பட்ட குடவரை கோயிலான இக்கோயில், முற்காலப் பாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதேபோல் அவர்களது காலத்திலேயே கழுகுமலை மலை மீது சமணப்பள்ளி மற்றும் வெட்டுவான் கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது. கடினமான பாறையை சதுரமாக வெட்டியெடுத்து அதன் நடுப்பகுதி பாறை கோயிலாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதனை வெட்டுவான் கோயில் என அழைக்கின்றனர். இத்தகைய கோயில், தமிழகத்திலேயே இங்குதான் உள்ளது என்பது சிறப்பாகும். வரலாற்று சின்னங்களாக உள்ள இவற்றை தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்ட மரபு சின்னமாக இந்த மலை உள்ளது. இங்கு கடந்த 9.8.2021ல் ₹50 லட்சத்தில் வெட்டுவான் கோயில் முதல் உச்சி பிள்ளையார் கோயில் வரை கைப்பிடிகள் மற்றும் படிகள் அமைப்பது, ₹19 லட்சத்தில் 3 பெரிய அளவிலான ஒளிரும் பெயர் பலகைகள், ₹11 லட்சத்தில் 2 சிறிய ஒளிரும் பெயர் பலகைகள், தலா ₹10 லட்சத்தில் கிரிப்பிரகார மேல ரதவீதியில் பேருந்து நிலையம் அருகே மற்றும் கழுகாசலமூர்த்தி கோயில் அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் அமைப்பு ஆகிய பணிகள் தொடங்கப்பட்டு முடிவடைந்துள்ளன. மலைப்பகுதிக்கு இரு காவலாளிகள் மட்டுமே உள்ளனர். ஆனால், இங்குள்ள சமண சிற்பங்கள் மற்றும் சமணர் படுகை, வெட்டுவான் கோயில் உருவானது குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விளக்க வழிகாட்டி நியமிக்கப்படவில்லை.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வந்தால் அவர்களுக்கு மலையின் சிறப்புகளை எடுத்துக்கூற யாரும் இல்லாததால், வெறும் புகைப்படம் எடுக்கும் இடமாகவே உள்ளது. எனவே மலைப்பகுதியில் உள்ள சிற்பங்கள் குறித்து விளக்கிக்கூற வழிகாட்டியை நியமிக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து கழுகுமலையை சேர்ந்த ஆறுமுகம் கூறுகையில், கழுகுமலையில் உள்ள மலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சிறப்பு வாய்ந்த கழுகுமலையை கடந்த 15.7.2014 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புராதன நகரமாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து மலை மீதுள்ள வெட்டுவான் கோயில், சமணர் சிற்பங்களை சுற்றுலா பயணிகள் சிரமமின்றி மலை மீது ஏறிச்செல்ல படிக்கட்டுகளின் இருபுறமும் கம்பிகள் அமைக்கப்பட்டன. மலையில் சமணர் சிற்பங்கள் உள்ள இடம், வெட்டுவான் கோயில் உள்ள இடம் ஆகியவற்றை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டது. மலையின் நுழைவுவாயில் பகுதியில் சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டது. பூங்காவை சுற்றி நிழல் தரும் மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன.

மலை மீதுள்ள சமணர் சிற்பங்கள், வெட்டுவான் கோயில், குடவரை கோயில் குறித்த அரிய தகவல்களை சுற்றுலா பயணிகளுக்கும், மாணவ- மாணவிகளுக்கும் விளக்கிக்கூற வழிகாட்டி (கைடு) கிடையாது. இதனால் இங்கு வருவோர் சிற்பங்களை ரசித்துவிட்டு, செல்பி மட்டும் எடுத்துச் செல்கின்றனர். மேலும் மலைப்பகுதி நுழைவு பகுதியிலும், மலையில் உள்ள அய்யனார் கோயில் பகுதியிலும் தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். மலைப்பகுதியில் மின் விளக்குகள் பொருத்தி ஒளிர விட வேண்டும். இதனால் இரவு நேரங்களில் சுமார் 20 கி.மீ. தூரத்தில் இருந்து பார்த்தாலும் பழநி மலைபோல், கழுகுமலை மலை பிரகாசமாக தெரியும். மலையின் நுழைவுவாயில் பகுதியில் புறக்காவல் நிலையமும் அமைக்க வேண்டும். இதனால் கழுகுமலை சுற்றுலாதலமாக மேம்படும். வேலை வாய்ப்பும் பெருகும், என்றார்.

The post சுற்றுலா பயணிகளின் ‘செல்பி’ ஸ்பாட்டாக மாறுகிறது கழுகுமலை சமணப்பள்ளி, வெட்டுவான் கோயில் சிறப்புகளை கூற வழிகாட்டி நியமிக்கப்படுவாரா? appeared first on Dinakaran.

Related Stories: