கருவேல முட்புதர்களை அகற்றிவிட்டு கோட்டைகரை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம் : ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கோட்டைகரை ஆற்றில் உள்ள கருவேல முட்புதர்களை அகற்றிவிட்டு தூர்வாரி மழை காலங்களில் கடலுக்கு வீணாக செல்லும் உபரி நீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் விதமாக ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற் களஞ்சிய பகுதியாக விளங்கும் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள கோட்டைகரை ஆறு சுமார் 30 கி.மீ தூரத்திற்கும் அதிகமான நீளம் கொண்டது. இந்த பகுதியில் ஆண்டுதோறும் மழை காலங்களில் பெய்யும் மழை நீர், மழையால் கண்மாய் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் கோட்டைகரை ஆற்றின் வழியாக வீணாக கடலுக்கு சென்றடைகிறது.

இந்த ஆற்றின் பெரும்பாலான உட்பகுதி முழுவதும் காட்டு கருவேல முட்புதற்கள் நிறைந்து காடு போல் காட்சியளிக்கின்றது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏராளமான தண்ணீர் வீணாக கடலுக்கு தான் சென்றடைந்தது. இதற்கு காரணம் இந்த ஆற்றினை தூர்வாரி கரைகளை பலப்படுத்தாமலும், தடுப்பணைகள் ஏதும் கட்டாமல் விடப்பட்டது தான்.
ஆண்டுதோறும் மழை காலங்கலில் மழை நீர் வீணாவதை தடுத்து நிறுத்தி விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் சனவேலி கோட்டைகரை ஆற்றின் குறுக்கே ஒரு அணையை கட்டினால் இனிவரும் மழை காலங்களிளாவது கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை சேமிக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அவ்வாறு சேமித்து வைக்கப்படும் தண்ணீரைக் கொண்டு விவசாயிகள் தங்களின் விளை நிலங்களுக்கு விட்டு விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும் விவசாயம் நன்கு செழிப்படையும். இதனால் இப்பகுதியில் உள்ள சுமார் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என்பது குறிப்பிடதக்கது.கடந்த அதிமுக ஆட்சியில் இது சம்மந்தமாக எந்தவித முயற்சியும் எடுக்காமல் விட்டு விட்டதால் இன்றளவும் இப்பகுதி வானம் பார்த்த பூமியாகவே உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்போதைய ஆளும் திமுக அரசு கோட்டைகரை ஆற்றில் உள்ள முட்புதர்களை அகற்றுவதுடன் ஆற்றை தூர்வாரி நீர் தேக்குவதற்கான சரியான இடத்தை தேர்வு செய்து பதிப்பின்றி ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டிற்கு முந்தைய ஆண்டு தவிர அதற்கு முந்தைய சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் போதிய நீர் தேக்கம் இல்லாததாலும் பொதுமக்கள் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வந்தனர். மேலும் ஒரு குடம் தண்ணீர் ரூ 5 முதல் ரூ 10 வரை வாங்கி பயன்படுத்தி வந்தனர்.

ஆகையால் இப்பகுதியில் மேலும் இது போன்ற நிலை ஏற்படாமல் இருப்பதற்கு இது போன்ற நீர் நிலைகளை பாதுகாத்து பயன்படுத்த வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது எனவே தமிழக அரசுசும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து மழை காலங்களில் உபரி நீர் வீணாக கடலுக்கே சென்றடைவதை தடுத்து நிறுத்தும் விதமாக கோடை காலத்தில் அரசு உரிய நிதியை ஒதுக்கீடு செய்து கருவேல முட்புதர்களை அகற்றிவிட்டு தூர் வாரி தண்ணீரை சேமிப்பதற்கு ஏதுவாக ஒரு தடுப்பணையை கட்டி தர வேண்டும்’’என்றனர்.

The post கருவேல முட்புதர்களை அகற்றிவிட்டு கோட்டைகரை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: