3 டன் ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்

 

கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அருகே கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியுடன், இரண்டு பிக்கப் வேன்களை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் எஸ்.ஐ மூர்த்தி தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் இரவு, வேப்பனஹள்ளி-காமசமுத்திரம் சாலையில் உள்ள சிங்கிரிப்பள்ளி கிராமத்தில் உள்ள ஆலமரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த 2 பிக்அப் வேன்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஒரு வேனில் தலா 50 கிலோ எடை கொண்ட 33 பைகளில், 1,650 கிலோ ரேஷன் அரிசியும், மற்றொரு வேனில் தலா 50 கிலோ எடை கொண்ட 27 பைகளில் 1,350 கிலோ ரேஷன் அரிசியும் என மொத்தம் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வேன்களுடன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், வேன்களை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், தம்ஜம்கொட்டஅள்ளி கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(23), பலமனேரி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த ராஜா(28) ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஏக்கல்நத்தம், முலுக்கலப்பள்ளி, பொம்மதாசனப்பள்ளி, குருவிநாயனப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில், குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை அதிக விலைக்கு கர்நாடகாவில் விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 3 டன் ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: