உச்ச நீதிமன்றத்தின் அதிரடி

இந்தியாவில், யூனியன் பிரதேசமான டெல்லியின் சட்டம்-ஒழுங்கு மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. டெல்லியில் தற்போது முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி நிர்வாகம் தொடர்பாக அரசுக்கும், டெல்லி துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தன. இதுதொடர்பாக 2015-ல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது. பின்னர் உச்ச நீதிமன்றம் என இவ்வழக்கு நீண்டது. கடைசியாக தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹிமா கோலி, நரசிம்மா ஆகிய 5 பேர் கொண்ட உச்சநீதிமன்றத்தின் சாசன அமர்வு வழக்கை விசாரித்தது.

இதற்கிடையில், 2021-ல் தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. புதிய சட்ட திருத்தத்தின்படி, டெல்லி அரசு எந்த முடிவு எடுத்தாலும், துணை நிலை ஆளுநரின் கருத்தை கேட்டறிவது கட்டாயமாக்கப்பட்டது. இதன்பிறகு அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கும்கூட, துணைநிலை ஆளுநரின் அனுமதியை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அதாவது, ‘‘இதர யூனியன் பிரதேசங்களுக்கும், டெல்லிக்கும் வித்தியாசம் இருக்கிறது.

டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாமல் இருக்கலாம். ஆனால், சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. ஜனநாயக நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் மட்டுமே அதிகாரம் இருக்கவேண்டும். பொது ஒழுங்கு, காவல்துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களை தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள், அவரவர் துறை சார்ந்த அமைச்சர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். டெல்லி துணைநிலை ஆளுநரைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரமும் உள்ளது. டெல்லி அரசின் அறிவுரைப்படியே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும்’’ என நெற்றிப்பொட்டில் நச்சென அடித்தாற்போல் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் 160, 356, 357 ஆகிய பிரிவுகளின்கீழ் ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டும்தான் அவரால் மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிட முடியும்.

டெல்லி விவகாரத்தில், கவர்னர் தனது அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்பட தவறிவிட்டார் என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மக்களாட்சி தத்துவத்தை ஏற்றிருக்கிற இந்தியாவில், ஆங்கிலேயர் காலத்து நடைமுறையான ஆளுநர் பதவி தேவையற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது, மக்களால் தேர்வு செய்யப்படாத ஆளுநர் தனது அதிகாரத்தைக்கொண்டு, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட மாநிலத்தின் ஆட்சியினை அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவின் மூலம் கலைத்துவிடலாம் என பூச்சாண்டி காட்டுவது மக்களாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது. ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் உறவுப்பாலமாக செயல்பட வேண்டிய ஆளுநர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது மாநில உரிமைகளுக்கும், மக்களாட்சி தத்துவத்துக்கும் ஊறு விளைவிப்பதாகும். உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு, டெல்லிக்கு மட்டும் பொருந்தாது. நாடு முழுவதும் உள்ள ஆளுநர்கள் இந்த அறிவுரையை பின்பற்றினால், ஜனநாயக மாண்பு காப்பாற்றப்படும்.

The post உச்ச நீதிமன்றத்தின் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: