கோடை விழா ஏற்பாடுகள் தீவிரம்

ஏற்காடு, மே 12: ஏற்காட்டில் 46வது கோடை விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன் படி இந்தாண்டிற்கான 46வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இம்மாத இறுதியில்., நடத்த மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக கொல்கத்தாவில் இருந்து பல்வேறு பூச்செடிகள் எடுத்து வர ஏற்பாடு உள்ளது. இதனை தொடர்ந்து அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டம், மான் பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலா பயணிகள், பொதுமக்களை கவரும் வகையில் வண்ண வண்ண பூச்செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியில் தோட்டக்கலை துறை சார்பில் பூக்களால் பல்வேறு உயிரினங்களின் உருவங்கள் தயார் செய்து வைக்கவும் தோட்டக்கலைத் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இது தவிர இந்த ஆண்டு கோடை விழாவில் பூச்செடிகள் விற்பனை அங்காடி ஒன்றும் திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அண்ணா பூங்காவில் மட்டும் பத்தாயிரம் செடிகள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக செல்யோகியா மற்றும் பிளாக்ஸ், சால்வியா, கேலண்டுலா, சாமந்தி, ஜினியா,ஆஸ்தர் ஆகிய செடிகள் தற்போது வளர்க்கப்பட்டு வருகிறது. அதே போல் கொல்கத்தாவில் இருந்து நான்காயிரம் டேலியா பூ செடிகள் வரவழைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இது தவிர கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து 7 ஆயிரம் செடிகள் வளர்க்கப்பட்டு மலர் கண்காட்சியில் வைக்கப்பட உள்ளது. மலர் கண்காட்சியை முன்னிட்டு அழகு தோட்டங்களுக்கான போட்டி நடத்தப்பட்டுள்ளது. வீட்டு தோட்டம் மற்றும் மாடித்தோட்டம், பங்களா தோட்டம், ஹோட்டல் தோட்டம், நிறுவனங்கள் தோட்டம் போன்றவற்றை பராமரிப்பவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம் என்றும் தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. குறிப்பாக இவர்கள் அண்ணா பூங்கா முழுவதும் வளர்க்கப்பட்டு வரும் செடிகள் மற்றும் பூக்களை பார்த்து மகிழ்கின்றனர்.

The post கோடை விழா ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: