அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் அருங்குளம் அதிமுக ஊராட்சி தலைவரின் கணவர் தொடர்ந்து அத்துமீறல்: புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருத்தணி, மே 11: அருங்குளம் ஊராட்சியில் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து வரும் அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது வழக்கு பதிவு மட்டுமே நடைபெற்ற நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. திருவலாங்காடு ஒன்றியம் அருங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருபவர் சரண்யா (35). இவர், அதிமுக கட்சியை சேர்ந்தவர். இவரது கணவர் முரளி (40). இவர் தனது மனைவிக்கு பதில் ஊராட்சி நிர்வாகத்தை கவனித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முரளி, கடந்த சில மாதங்களாக அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்து வருவதாகவும், உதாரணமாக, கிராம நிர்வாக அலுவலர் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்கும்போது, அவரது கையெழுத்து கிராம சபை கூட்ட தீர்மான புத்தகத்தில் போடவிடாமல் தடுத்து வருவதாக கூறப்படுகிறது. இது தவிர, கிராம சபையில் ஊரக வளர்ச்சித் துறையினர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களும் பங்கேற்கும்போதும், அந்த அரசு அலுவலர்களும் தீர்மான புத்தகத்தில் கையொப்பம் போடவிடாமல் தடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற கிராம நிர்வாக அலுவலருக்கும், முரளிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பொறுப்பு கிராம நிர்வாக அலுவலர் ரகுவரன் இருதரப்பினர் இடையே சமரசம் செய்ய முயற்சி செய்துள்ளார். அதற்கு ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முரளி, கிராம நிர்வாக அலுவலர் ரகுவரனை தரக்குறைவாக பேசியுள்ளார். பின்னர், கிராம சபை கூட்ட தீர்மான புத்தகத்தில் கையெத்திட கூடாது என முரளி எதிர்ப்பு தெரிவித்தார். ஊராட்சி செயலாளரிடம் இருந்த நோட்டு புத்தகத்தை பறித்து கொண்டும் சென்றார்.

மேலும், கிராம பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வாரிசு சான்றுகள் உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் ஆகியவற்றை குறித்து மனு செய்கின்ற மனுதாரர்கள் மற்றும் கிராமத்தில் விசாரணை செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் வீடுகளுக்கு சென்றால், முரளி, என்னை அழைத்து செல்லாமல் எப்படி விசாரணை செய்யலாம், உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது என பலமுறை அரசு பணிகளை செய்யவிடாமல் தடுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த ஊராட்சியில் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலர்களை பணி செய்ய விடாமல் தொடர்ந்தும் அச்சுறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், அருங்குளம் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலர் ரகுவரன், கனகம்மாசத்திரம் போலீசில், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முரளி, என்னை அரசு பணிகளை செய்யவிடாமல் தடுத்து வருவதாகவும். என்னை அச்சுறுத்தி வருவதாக கடந்த வாரம் 4ம்தேதி தேதி புகார் கொடுத்தார். கனகம்மாசத்திரம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட கனகாம்பரம் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இருப்பினும், மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இதனால், விரத்தி அடைந்துள்ள கிராம நிர்வாக அலுவலர் சங்கம் ஒரு மாநில பொறுப்பில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன்? என தெரியவில்லை. எனவே, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு போதிய பாதுகாப்பற்ற சூழ்நிலை தற்போது அருங்குளம் கிராமத்தில் நிலவி வருகிறது. இதேபோன்று பல்வேறு கிராமங்களில் காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்கினால் பல்வேறு கிராமங்களில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் போதிய பாதுகாப்பாற்ற சூழ்நிலை உருவாகிவிடும். எனவே, முதல்வர் ஸ்டாலின், மாவட்ட எ.ஸ்.பி, திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பந்தப்பட்ட நபரின் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் அருங்குளம் அதிமுக ஊராட்சி தலைவரின் கணவர் தொடர்ந்து அத்துமீறல்: புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: