அதானி குழும முறைகேடு வழக்கில், 6 பேர் கொண்ட நிபுணர் குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!!

டெல்லி : அதானி குழுமம் பங்குசந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டிய நிலையில், அது தொடர்பான விசாரணையை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் நிபுணர் குழு தாக்கல் செய்தது. அரசியல் ரீதியாகவும் பொது வெளியிலும் நாட்டை உலுக்கிய அதானி குழும முறைகேடு புகார் கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் மொத்த அமர்வையும் முடக்கியது. போலியான நிறுவனங்களை உருவாக்கி, பங்கு சந்தையில் பல ஆயிரம் கோடி அளவுக்கு சந்தை மதிப்பு அதானி மோசடியாக உயர்த்தினார் என்று அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் பரபரப்பு அறிக்கை ஒன்றை கடந்த ஜனவரி முதல் வாரத்தில் வெளியிட்டது.

இதனால் உலகின் 3ம் நிலை பணக்காரராக இருந்த அதானி 25வது இடத்திற்கும் கீழே சென்றார். இது குறித்து விசாரிக்குமாறு தொடரப்பட்ட பொது நல வழக்கை தொடர்ந்து 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் அமைத்தது. 2மாதங்களில் அறிக்கை அளிக்கவும் நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. அதானி குழுமத்தில் முறைகேடு நடந்திருந்தால் முதலீட்டாளர்களை எவ்வாறு பாதுகாப்பது, முறைகேட்டால் ஏற்படும் தாக்கங்களை மதிப்பிடவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், விசாரணையை நிறைவு செய்த நிபுணர் குழு நேற்று முன்தினம் சீலிட்ட உரையில் விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.அதானி குழும முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை நாளை மறுநாள் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. மறுபுறத்தில் நீதிமன்ற ஆணைக்கு இணங்க இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபியும் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post அதானி குழும முறைகேடு வழக்கில், 6 பேர் கொண்ட நிபுணர் குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!! appeared first on Dinakaran.

Related Stories: