தமிழக வளர்ச்சி பணிகளுக்கு ஆளுநர் தடையாக உள்ளார்: அமைச்சர் சேகர்பாபு பேச்சு

தண்டையார்பேட்டை: தமிழக வளர்ச்சிப் பணிகளுக்கு ஆளுநர் தடையாக உள்ளார், என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வடக்கு மாவட்டம் ஆர்கே நகர் கிழக்கு பகுதி திமுக சார்பில் தமிழ்நாடு அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கொருக்குப்பேட்டை மண்ணப்பா முதலி தெருவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பகுதி செயலாளர் லட்சுமணன் தலைமை வகித்தார். எம்எல்ஏ எபினேசர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து பேசியதாவது:

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 34 லட்சம் மனுக்களை மக்கள் அளித்தனர். அதில் 95 சதவீத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. திராவிட மாடல் ஆட்சியில் எங்கு தவறு நடந்தாலும் தண்டனை பெற்று தரும் ஆட்சி நடக்கிறது. திமுக ஆட்சியை கொச்சைப்படுத்தி பேசும் ஆளுநரின் பேச்சு கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் பாஜவை கொண்டு வர அவர் இப்படி செய்கிறார். காலாவதியாகப் போவது திமுக ஆட்சி அல்ல, பாஜ ஆட்சி தான். தமிழக வளர்ச்சி திட்டங்களை நந்திபோல் குறுக்கே நின்று தடுக்கும் ஆளுநரை அப்புறப்படுத்தப் போவது திராவிட மாடல் ஆட்சிதான். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, கூட்டத்தில் 500 பேருக்கு ஹாட் பாக்ஸ்களை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். நிகழ்ச்சியில், வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, மாவட்ட செயலாளர் இளைய அருணா, தொகுதி பொறுப்பாளர் நம்பிராஜன், ஆர்.கே.நகர் மேற்கு பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன், மண்டலக்குழு தலைவர் நேதாஜி கணேசன், மாவட்ட அவை தலைவர் வெற்றிவீரன், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் மருது கணேஷ், வட்ட செயலாளர்கள் தமிழ்செல்வன், கதிரேசன், ஆர்.டி.ராஜா, இளைஞரணி துணை அமைப்பாளர் பொன் இளவரசன், கவுன்சிலர்கள் தேவிகுமாரி, மணிமேகலை, பாலு உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

The post தமிழக வளர்ச்சி பணிகளுக்கு ஆளுநர் தடையாக உள்ளார்: அமைச்சர் சேகர்பாபு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: