காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் எச்சரித்தும் கல்லா கட்டும் நேரடி நெல் கொள்முதல் நிலைய முகவர்கள்: விவசாயிகள் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல்

காஞ்சிபுரம், மே 8: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த நவரை பருவத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் நெல் பயிரிடப்பட்டது. கடந்த ஒரு மாதமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல்களை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனைக்கு எடுத்துச் சென்றால் அங்கு நியமிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளை சேர்ந்தவர் மூட்டை ஒன்றுக்கு ₹50 முதல் 65 வரை கட்டாயமாக வசூலிக்கின்றனர் என்ற புகார் எழுந்தது.

ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இதுபோன்ற முறை கேட்டில் ஈடுபட்டால் லஞ்ச ஒழிப்பு துறையினர் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், இதை எல்லாம் சற்றும் கண்டுகொள்ளாத நேரடி நெல் கொள்முதல் நிலைய முகவர் அங்கு நியமிக்கப்பட்ட ஊழியரை கையில் போட்டுக்கொண்டு கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர்.அவ்வகையில், காஞ்சிபுரம் அடுத்த குணகரம்பாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட்ட அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் டோக்கன் பெறுவதற்கு கூட சிபாரிசு தேவைப்படுகிறது.மேலும் பணம் செலுத்தினால் மட்டுமே முன்னுரிமை தருவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து விவசாயி ஒருவர், அங்கு நியமிக்கப்பட்ட அரசு ஊழியரிடம் கேட்டபோது அவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் விவசாயி பணம் அளிக்கும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த 120 நாட்களாக அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்கு முன்பு பல ஆயிரங்களை செலவு செய்த பின்னும், கொள்முதலுக்கும் லஞ்சம் தர வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. வருத்தத்துடன் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விவசாயிகள் முன் வைத்துள்ளனர்.

The post காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் எச்சரித்தும் கல்லா கட்டும் நேரடி நெல் கொள்முதல் நிலைய முகவர்கள்: விவசாயிகள் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: