கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி நீர்த்தேக்கம் வந்தது; சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை ஆகிய நீர்த்தேக்கங்களாகும். இதில் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் 8,458 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கம் 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது. இந்நிலையில், கோடைகாலம் தொடங்கியுள்ளதால் பூண்டியில் நீர் மட்டம் குறைந்து வருகிறது.

இதனையடுத்து தமிழ்நாடு அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று, கடந்த 1ம் தேதி ஆந்திர மாநிலம், கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ணா நதி நீர் பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடைந்தது. நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில், நேற்றைய நிலவரப்படி 1,000 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட 70 கன அடி நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

மேலும், பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து புழல் ஏரிக்கு 250 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, பேபி கால்வாய் வழியாக 13 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. எனவே இந்த முறை ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 2 டிஎம்சி நீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதே போல் புழல் ஏரியில் 2,455 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 202 கன அடி அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி நீர்த்தேக்கம் வந்தது; சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: