இஸ்லாமிய வாழ்வியல்
“உழைக்கும் தோழர்களே ஒன்றுகூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்” என்றெல்லாம் இன்று பாடுவதும் பேசுவதும் எளிது. ஆனால், பணியாளர்களை அடிமைகளாய் நடத்திக்கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில், சாட்டையால் அடித்து வேலை வாங்கிக்கொண்டிருந்த சூழலில், மிருகங்களைவிடக் கேவலமான நிலையில் பணியாளர்கள் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில், “கூலி கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி மாடாய் உழைப்பதுதான் நம் தலைவிதி” என்று பணியாளர்கள் நொந்து நூலாகிப் போயிருந்த நாளில், சாட்டையடி வாங்கித் துடிக்கும் பணியாளரைக் கண்டு ரசிக்கும் முதலாளி வர்க்கத்தினர் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் அந்தப் புரட்சிக் குரல் ஓங்கி ஒலித்தது.
“உழைப்பவரின் வியர்வை உலர்வதற்கு முன்பே அவருடைய கூலியைக் கொடுத்துவிடுங்கள்”
“உங்கள் பணியாளர்கள் உங்கள் சகோதரர்கள். அவர்களைக் கண்ணியமாக நடத்துங்கள்”
“நீங்கள் உண்பதையே உங்கள் பணியாளருக்கும் உண்ணக் கொடுங்கள். நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தக் கொடுங்கள்”
“உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியாளர்கள் குறித்து நீங்கள் இறைவனிடம் பதில் சொல்லவேண்டும்”
ஓங்கி ஒலித்த இந்தப் புரட்சிக் குரல் அன்றைய உலகத்தை குறிப்பாக, அரபுலகத்தை அதிர வைத்தது. முதலாளி வர்க்கமான உயர்குல குறைஷிப் பிரமுகர்கள் முகம் சுளித்தனர். ஆனால் ஏழை, எளிய பாட்டாளி வர்க்கம் அந்தப் புரட்சிக் குரலை முழங்கியவரின் பின்னால் அணிவகுத்தது. அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டது. 15-ஆம் நூற்றாண்டுக்கு முன்பே அந்தப் பாலை வெளியில் வெடித்தது ஒரு பண்பாட்டுப் புரட்சி. ஒரு தொழிலாளர் புரட்சி. அந்தப் புரட்சிக் குரலுக்குச் சொந்தக்காரர் இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.
அடிமைகளாய் அவதிப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையில் அவர் ஏற்றிவைத்த சமத்துவ சம உரிமை விளக்குதான், பின்னால் வந்த மனித உரிமை ஆர்வலர்களுக்கு வெளிச்சம் பாய்ச்சியது. பின்னால், வந்தவர்கள் வர்க்க மோதல்களை முன்னெடுத்து தொழிலாளர் உரிமையைப் பேசினார்கள். ஆனால், நபிகளாரோ வர்க்க மோதல் இல்லாமலேயே தொழிலாளர் உரிமையை நிலைநாட்டி, முதலாளிகளையும் தொழிலாளிகளையும் சகோதரர்களாய் ஆக்கினார்.
இன்றைக்கும் நபிகளாரின் அந்த உன்னத வழிமுறை சுடர் விடும் தீபமாய் நம் முன் ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதைப் பின்பற்றினால் தொழில் துறையில் அமைதி நிலவுவதுடன் வர்க்க மோதல்களையும் களைந்துவிட முடியும்.
– சிராஜுல்ஹஸன்
இந்த வாரச் சிந்தனை
“உங்கள் பணியாளர்கள் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அடைக்கலச் சொந்தங்கள். அவர்களிடம் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள்.”- நபிமொழி.
The post வியர்வை உலரும் முன்… appeared first on Dinakaran.
