மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே லாரி மோதியதில் ரயில்வே கேட் சேதம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

பொன்னேரி: மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே லாரி மோதியதில் ரயில்வே கேட் சேதம் அடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சென்னை – கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் அமைந்துள்ளது. நேற்று பிற்பகல் இந்த ரயில்வே கேட்டை மதுபோதையில் இருந்த லாரி ஓட்டுநர் ஒருவர் இடித்து விட்டு நிற்காமல் பஜாரை நோக்கிச் சென்றார். இதனையடுத்து உடனடியாக ரயில்வேகேட் மூடப்பட்டது. இதனால் சென்னை – கும்மிடிப்பூண்டி இரு மார்கங்களிலும் புறநகர் ரயில் சேவை சுமார் 30 நிமிடங்கள் கால தாமதமாக இயக்கப்பட்டன.

லாரி இடித்ததில் சேதமடைந்த ரயில்வே கேட் திறக்கப்படாமல் இருந்ததால் மீஞ்சூரில் இருந்து காட்டூர், தத்தைமஞ்சி, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் வாகனங்கள் ரயில்வே கேட்டில் அணிவகுத்து நின்றன. இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்ற நிலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனரக வாகனங்கள், பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து ரயில்வேகேட் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து வாகனங்கள் ரயில்வே கேட்டை கடந்து சென்றன. இங்கு கடந்த பல ஆண்டுகளாக ரயில்வே உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகள் கிடப்பில் உள்ளன. இதனிடையே ரயில்வே கேட்டை இடித்துவிட்டுச் சென்ற லாரி மீஞ்சூர் பஜாரில் மீண்டும் ஒரு காரை இடித்ததால் அந்த லாரியை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். மதுபோதையில் இருந்த லாரி ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே லாரி மோதியதில் ரயில்வே கேட் சேதம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: