பிரான்மலை கோயிலில் தேரோட்ட திருவிழா ஏராளமானோர் வடம் பிடித்தனர்

 

சிங்கம்புணரி, மே 3: சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் உள்ள திருக்கொடுங்குன்றநாதர் குயிலமுத நாயகி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சிங்கம்புணரி அருகே குன்றக்குடி ஆதீனத்திற்கு உட்பட்ட திருக்கொடுங்குன்றநாதர் குயிலமுத நாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9ம் நாளான நேற்று திருத்தேராட்டம் வெகு விமர்சையாக நடந்தது.

நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ரத பூஜை செய்யப்பட்டு சுவாமி மற்றும் அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர். இதில் விநாயகர், சுப்பிரமணியர் தனித்தனி சிறிய தேரிலும், திருக்கொடுங்குன்றநாதர் குயிலமுதநாயகி அம்மன் மற்றும் பிரியாவிடை அம்மன் ஆகியோர் வண்ண மலர் அலங்காரத்தில் தனித்தனியாக பெரிய தேரிலும் எழுந்தருளினர். சிறிய சப்பரத்தில் சண்டிகேஸ்வரர் வைக்கப்பட்டது.

காலை 5.30 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்த தேர் ஒன்றன்பின் ஒன்றாக நிலை நிறுத்தப்பட்டது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தன. தேர் நிலையை அடைந்தவுடன் பக்தர்கள் வாழைப்பழம், மாம்பழம், மற்றும் லட்டு ஆகியவற்றை சூறை விட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். இதில் பிரான்மலை மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களை சேர்ந்த ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post பிரான்மலை கோயிலில் தேரோட்ட திருவிழா ஏராளமானோர் வடம் பிடித்தனர் appeared first on Dinakaran.

Related Stories: