ஊராட்சி தலைவரை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

ஸ்ரீபெரும்புதூர்: பிச்சிவாக்கம் பாமக ஊராட்சி தலைவரை கண்டித்து, திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பிச்சிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட செக்போஸ்ட் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், அரசு மேய்கால் புறம்போக்கு நிலத்தில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு, கடந்த ஓராண்டாக வீட்டு வரி ரசிது வழங்கப்படவில்லை. இதுகுறித்து பிச்சிவாக்கம் ஊராட்சி மன்ற நந்தகோபால், ஊராட்சி செயலர் ஆகியோரிடம், அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர். ஆனால், வீட்டு வரி ரசீது வழங்கவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் பிச்சிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் செக்போஸ்ட் பகுதி மக்கள், தங்கள் பகுதி மக்களுக்கு வீட்டுவரி ரசீது வழங்க வேண்டும் என்று ஊராட்சி தலைவர் நந்தகோபாலிடம் கேட்டுள்ளனர். அப்போது ஊராட்சி தலைவர், இப்பகுதி மக்களிடம் தரக்குறைவாக, அவதூறான வார்த்தைகளால் பேசுவதாக கூறிப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று தண்டலம் – பேரம்பாக்கம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சுங்குவார்சத்திரம் போலீசார், வருவாய் துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் சமாதனம் பேச்சுவார்ததை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

The post ஊராட்சி தலைவரை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: