தானிய உலர்களங்கள் அமைக்க வலியுறுத்தல் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஊராட்சி தலைவர் பேசியதால் பரபரப்பு

*விருத்தாசலம் ஒன்றிய கவுன்சிலர்கள் அதிர்ச்சி

வேப்பூர் : விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஊராட்சி தலைவர் பேசியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று ஒன்றிய தலைவர் மலர் தலைமையில் துணை தலைவர் பூங்கோதை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, ராதிகா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரவு- செலவு கணக்குகள் கவுன்சிலர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து பேசிய சுயேட்சை கவுன்சிலர் ஆனந்த கண்ணன், கடலூர் மாவட்ட எல்லையான டி.மாவிடந்தல் கிராமத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆசனூருக்கு செல்லும் சாலை சேதம் அடைந்த நிலையில் உள்ளதால் சீரமைத்து தர வேண்டும், என்றார். மேலும் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் எந்த அழைப்பும் கொடுக்கவில்லை. ஒன்றிய கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

இது‌ குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் ராதிகா கூறினார்.இதையடுத்து பேசிய ஒன்றிய கவுன்சிலர் செல்லதுரை, எங்கள் ஊருக்கு ஒன்றிய பொறியாளர்கள், அதிகாரிகள் யார் வந்து ஆய்வு பணிகள் மேற்கொண்டாலும் கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. ஊராட்சி மன்ற தலைவரை மட்டுமே அழைத்துச் செல்கின்றனர் என குற்றஞ்சாட்டினார். ஒன்றிய துணை தலைவர் பூங்கோதை பரவலூரில் இருந்து கலரங்குப்பம், எருக்கன்குப்பம் செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். இக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பின்வரிசையில் அமர்ந்திருந்த விசலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன் திடீரென விதியை மீறி மைக் வாங்கி பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

விசலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன் பேசியதாவது: எனது கிராமத்தில் ஜேஜேஎம் திட்டத்தின் கீழ் ரூபாய் 17 லட்சத்தில் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. போலியான ஆவணங்களை கொண்டு ஒரு சிலருக்கு குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முறையாக ஆய்வு செய்து நடைபெற்ற முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

இதுகுறித்து பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராதிகா உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வராசு, சரவணன், பாக்யராஜ், செந்தில்குமார், பச்சமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தங்களது வார்டில் உள்ள குறைகள் குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

The post தானிய உலர்களங்கள் அமைக்க வலியுறுத்தல் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஊராட்சி தலைவர் பேசியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: