விபத்தில் உயிரிழந்த மகள் சாவில் சந்தேகம்; கழுத்தில் காயம் ஏற்பட்டது எப்படி?: மறு பிரேத பரிசோதனை செய்ய தாயார் கோரிக்கை: நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் புகார்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம் அடுத்த அன்னை நகர் கடற்கரை கிராமத்தை சேர்ந்த பனியம்மாள் என்பவர் தனது குடும்பத்தினருடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:
எனது மகள் மேரி கிரிசாந்தி என்பவருக்கும் கொட்டில்பாடு கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த எட்வின் ராஜ் என்பவருக்கும் கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ம் தேதி நாகர்கோவிலில் தேவாலயத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சுமார் 3 ஆண்டுகள் 2 பேரும் வெளிநாட்டில் இருந்தனர். அப்போது வரதட்சணை ரீதியாக கொடுமைப்படுத்தினர். இதனால் மனமுடைந்த எனது மகள் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்து விட்டாள்.

பின்னர் கணவர் ஊருக்கு வரும்போது மட்டும் கணவர் வீட்டுக்கு செல்வார். அப்படி இருக்கும் வேளையில் எட்வின்ராஜின் தவறான சில நடவடிக்கைகள் எனது மகளுக்கு தெரிய வந்தது. இதை நேரில் பார்த்து எனது மகள் அதிர்ச்சி அடைந்தாள். இது பற்றி கேட்டபோது அதில்இருந்து அவளை மேலும் துன்பப்படுத்த தொடங்கினர். மேலகிருஷ்ணன்புதூரில் உள்ள கூட்டுறவு வங்கி ஒன்றில் எனது கணவர் மற்றும் எனது மகளின் பெயரில் பணம் டெபாசிட் செய்திருந்தோம்.

அந்த பணத்தையும் என் மகளை மிரட்டி வாங்கினர். மேலும் வரதட்சணை கொடுமைப்படுத்தி வந்தார்கள். மேலும் வீடு கட்டும் போது வரதட்சணை கொடுமைப்படுத்தியதால் மேலும் ரூ. 3 லட்சம் வழங்கி உள்ளோம். இது போக எனது மகள் பெயரில் எல்ஐசி யில் முதலீடுகள் இருந்தன. எனது மருமகன் எட்வின்ராஜ் குடும்பத்தில் உள்ள உறவினர் ஒருவருக்கு திருமணம் நடக்க உள்ளது. அதற்கு பணம் தேவைப்படுவதால் மகளின் எல்ஐசி முதலீட்டை அவர்கள் கைப்பற்ற திட்டமிட்டுள்ளார்கள்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணத்திற்காக புதிய துணி எடுப்பதற்காக எனது மகளையும் கோயமுத்தூர் அழைத்து சென்றனர். பின்னர் வரும் வழியில் கயத்தாறு அருகே விபத்து நடந்து எனது மகளை நெல்லை ஐகிரவுண்ட் மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் நாங்கள் அங்கு சென்ற போது வள்ளியூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும், பின்னர் நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்தனர்.

நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற போது தான் எனது மகள் இறந்தது எங்களுக்கு தெரிய வந்தது. அவளது கழுத்தில் காயம் இருந்தது. ஆனால் விபத்தில் சிக்கி அவள் இறந்ததாக தெரிவித்தனர். காரில் இருந்த வேறு யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை. இது திட்டமிட்ட கொலையாக இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். எனவே இது தொடர்பாக முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எனது மகளின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

The post விபத்தில் உயிரிழந்த மகள் சாவில் சந்தேகம்; கழுத்தில் காயம் ஏற்பட்டது எப்படி?: மறு பிரேத பரிசோதனை செய்ய தாயார் கோரிக்கை: நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: