திருமயம் அருகே தேக்காட்டூர் கிராமத்தில் அரசநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

 

திருமயம்: திருமயம் அருகே நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள தேக்காட்டூர் கிராமத்தில் அமைந்திருக்கும் அரசநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த ஓராண்டுக்கு மேலாக கோயில் புனரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. கடந்த மாதம் புனரமைக்கும் பணியில் அனைத்தும் முடிந்த நிலையில் விழா கமிட்டியாளர்கள் கோயிலுக்கு கும்பாபிஷேக நடத்த முடிவு செய்தனர்.

இந்நிலையில் கும்பாபிஷேக விழா முன்னிட்டு கடந்த 25ம் தேதி செவ்வாய்க்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 26ம் தேதி புதன்கிழமை காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், இரண்டாம் கால பூர்ணாஹுதி பூஜையும் அம்மனுக்கு தீபாராதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை நான்காம் கால யாக பூஜையும் கோபூஜை, லட்சுமி பூஜை, தன பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 9.45மணிக்கு கடம் புறப்பாடு தொடங்கியது.

பின்னர் பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு மூன்று நாட்களாக யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை மங்கல இசை முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்த பின்பு கருடன் கோயிலின் மேல் வட்ட மிட சரியாக 10 மணிக்கு சிவாச்சாரியார்கள் புனித நீரை கும்பத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர். அதனைத் தொடர்ந்து தீர்த்த வாரியும், தீபாராதனையும் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருட் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழா முன்னிட்டு திருமயம் காவல் ஆய்வாளர் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post திருமயம் அருகே தேக்காட்டூர் கிராமத்தில் அரசநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Related Stories: