நெடுஞ்சாலைத் துறையில் தினக்கூலி பணி ‌வழங்கக் கோரி தொழில்நுட்ப களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், ஏப்.28: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தொழில்நுட்ப களப்பணியாளர்கள் சங்கம் சார்பில் தினக்கூலி பணி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு சங்க கோட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முனிரத்தினம், சேகர், கோபிசந்திரன், ஏகாம்பரம், மாசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.இராமகிருஷ்ணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது அவர் பேசும்போது இந்தியாவிலேயே முதன் முதலில் தமிழக சட்டமன்றத்தில் தமிழக ஆளுநரை கண்டித்து தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான்.

எனவே அவருக்கு சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காவல்துறையை தன்னிடம் வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்களின் தற்கொலை பிடுங்கி. போலீஸ் ஏஎஸ்பி யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சட்டமன்றத்தில் உத்தரவு பிரித்தது மட்டுமல்லாமல் விசாரணை ஆணையம் அமைத்த ஒரே முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான். எனவே அவருக்கு எங்களது போராட்டத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
மேலும் இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி நீலவானத்து நிலவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் டி.கே.ராஜா, இ.ராஜேந்திரன், ஜெயராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, திருவள்ளூர் மாவட்ட நெடுஞ்சாலை துறை கோட்டத்திற்கு உட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் சாலைப் பணிகளில் தினக்கூலி அடிப்படையில் பணிசெய்த பணியாளர்கள் 1997 ல் திமுக ஆட்சியில் நிரந்தரம் செய்யப்பட்டனர். அதில் விடுபட்ட தினக்கூலி பணியாளர்களை நிறுத்தி விட்டனர். இந்நிலையில் திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்ட நெடுஞ்சாலை துறையில் 700 காலி பணியிடங்களில் ஏற்கனவே வேலை செய்து வழக்கில் இருக்கும் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், மேலும் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்குவதை கைவிட வேண்டும், சாலை பணிகளுக்கு பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post நெடுஞ்சாலைத் துறையில் தினக்கூலி பணி ‌வழங்கக் கோரி தொழில்நுட்ப களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: