சேலம், ஏப்.27: சேலம் மாவட்டத்தில் அதிக விபத்து ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ள நெடுஞ்சாலைகளில், தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதத்தில், சாலை விதிகளை மீறிய 1.30 லட்சம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்தார். எஸ்பி சிவகுமார், டிஆர்ஓ மேனகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் தொடர் விபத்துக்கள் ஏற்படும் இடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த இடங்களில் காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட இடங்களில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்து, நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:சேலம் மாவட்டத்தில் பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்க, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சேலம் மாநகர பகுதிகளில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில், ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டிய 66,568 நபர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 104 நபர்கள், செல்போன் பேசியவாறு வாகனம் ஓட்டிய 994 நபர்கள், மது அருந்தி வாகனம் ஓட்டிய 766 நபர்கள், சாலை சிவப்பு சிக்னல்களை மீறி வாகனம் ஓட்டிய 170 நபர்கள் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் 4 சக்கர வாகனம் ஓட்டிய 2,137 நபர்கள் என சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 70,779 நபர்கள் மீதும், சேலம் மாவட்ட பகுதிகளில் 58,885 வழக்குகளும் என மொத்தம் 1,29,664 நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 3 மாதங்களில் வாகன உயிரிழப்பு விபத்துக்ளை ஏற்படுத்தியவர்கள் மற்றும் சாலை விதிகளை கடைபிடிக்காத 1,135 பேரின் ஓட்டுநர் உரிமங்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக “ஏர் ஹாரன்” பயன்படுத்திய 117 நபர்களுக்கு ₹11.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சாலை விதிமீறல்களைக் கண்காணித்துப் பதிவு செய்ய, அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது. தனியார் பஸ்களில் முறையாக வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மாவட்டத்தில் பெரும்பாலான விபத்துக்கள் நெடுஞ்சாலைகளில் ஏற்படுகிறது.
எனவே, இந்த விபத்துக்களை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ள முக்கிய இடங்களில், தற்காலிக தடுப்புகளும், நிரந்தர எச்சரிக்கைப் பதாகைகளும் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோடை காலத்தைக் கருத்தில் கொண்டு, சாலைப்பணிகள் நடைபெறும்போது குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால், அதனை உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை விபத்துக்கள் இல்லாத மாவட்டமாக சேலம் மாவட்டத்தை உருவாக்கும் வகையில், அனைத்து துறை அலுவலர்களும், சாலை பாதுகாப்பு குறித்த தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாநகர துணை கமிஷனர் லாவண்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், ஆர்டிஓ.,க்கள் ராஜராஜன், சுப்பிரமணியன், பாஸ்கர், கல்யாணக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post அதிக விபத்து ஏற்படும் நெடுஞ்சாலைகளில் தற்காலிக தடுப்புகள் appeared first on Dinakaran.
