சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் வெறிச் செயல் குண்டுவெடிப்பில் 10 போலீசார் பலி: வேன் டிரைவரும் பரிதாப சாவு; பாதுகாப்பு படை தேடுதல் வேட்டை

தண்டேவாடா: சட்டீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய பயங்கர குண்டுவெடிப்பில் 10 போலீசாரும், வேனை ஓட்டிச் சென்ற டிரைவரும் பரிதாபமாக உயிரிழிந்தனர். அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சட்டீஸ்கர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நக்சலைட்களை ஒழிக்க பாதுகாப்பு படையினரும் போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 450 கிமீ தொலைவில் உள்ள தண்டேவாடா மாவட்டத்தின் அரண்பூர் வனப்பகுதியில் தர்பா பிரிவைச் சேர்ந்த மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக, நக்சல் ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மாநில ரிசர்வ் காவல் படையைச் (டிஆர்ஜி) சேர்ந்த போலீஸ் குழு வேனில் தேடுதல் வேட்டைக்கு நேற்று புறப்பட்டுனர்.

பிற்பகல் சுமார் 1 மணி அளவில் தேடுதலை முடித்துக் கொண்டு அவர்கள் திரும்பிக் கொண்டிருந்த போது, அரண்பூர் மற்றும் சமேலி கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐஇடி வகை வெடிகுண்டை நக்சல்கள் வெடிக்கச் செய்தனர். இந்த பயங்கர குண்டுவெடிப்பில் போலீசார் வந்த வேன் வெடித்துச் சிதறியது. அதிலிருந்து 10 போலீசாரும், வேன் டிரைவரும் சம்பவ இடத்திலேயே பலியானதாக பஸ்தார் ரேஞ்ச் போலீஸ் ஐஜி சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், பலியானவர்களின் உடல்களை மீட்டனர். தாக்குதல் நடத்திய நக்சல்கள் அருகில் உள்ள வனப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்பதால் அப்பகுதியை சுற்றி பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் மாவோயிஸ்ட்கள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது. இதற்கு முன், கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களின் எல்லையில், பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ‘‘மாவோயிஸ்ட்களுக்கு எதிரான போர் கடைசி கட்டத்தில் இருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் அவர்கள் தப்ப முடியாது. நாங்கள் ஒருங்கிணைந்து நக்சலிசத்தை ஒழிப்போம்’’ என்றார். மேலும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் பாகேலை தொடர்பு கொண்டு கள நிலவரங்களை கேட்டறிந்தார். நிலைமையை சமாளிக்க ஒன்றிய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

* சாலையில் 10 அடி பள்ளம்
ஐஇடி வகை குண்டை குறிப்பிட்ட தூரத்தில் இருந்தபடி வெடிக்கச் செய்யக் கூடியது. இந்த தாக்குதலில் சுமார் 50 கிலோ ஐஇடி குண்டை நக்சலைட்கள் பயன்படுத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. குண்டு வெடித்த இடத்தில் 10 அடி ஆழத்திற்கு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. போலீஸ் வாகனம் வெடித்துச் சிதறி, 20 அடி தூரம் வரை தூக்கி எறியப்பட்டுள்ளது.

* உள்ளூர் மக்களை கொண்ட ரிசர்வ் படை
மாநில ரிசர்வ் காவல் படையில் (டிஆர்ஜி) பெரும்பாலும், உள்ளூர் பழங்குடி மக்களே பணி அமர்த்தப்பட்டுள்ளனர். நக்சல் ஒழிப்பு பணிக்காக அவர்கள் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் ஆவர். மேலும், சரணமடைந்த மாவோயிஸ்ட்களும் இந்த படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் தண்டேவாடா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

* மீண்டும் நக்சல்கள் எழுச்சியா?
இந்த தாக்குதல் சம்பவம் மீண்டும் நக்சல்களின் எழுச்சியைக் காட்டுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த சட்டீஸ்கர் உள்துறை அமைச்சர் தாம்ரத்வாஜ் சாஹு, ‘‘காங்கிரஸ் ஆட்சியின் 4 ஆண்டுகளில் மாவோயிஸ்டகளின் செயல்பாடுகள் 40 சதவீதம் குறைந்துள்ளது. அவர்களை பின்னுக்குத் தள்ளுவதில் அரசு வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும், நக்சல்கள் தங்கள் இருப்பைக் காட்ட அவ்வப்போது இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களை மேற்கொள்கின்றனர்’’ என்றார்.

* தலைவர்கள் கண்டனம்
பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘தண்டேவாடாவில் சட்டீஸ்கர் காவல்துறை மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதில் உயிர்த்தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களின் தியாகம் எப்போதும் நினைவுகூரப்படும்’ என கூறி உள்ளார்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டரில், ‘நக்சல்களின் கோழைத்தனமான தாக்குதலால் வேதனை அடைந்தேன். வீரமரணம் அடைந்த ஜவான்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டர் பதிவில், ‘கோழைத்தனமான நக்சலைட் தாக்குதலில் 10 போலீசாரும், டிரைவர் ஒருவரும் வீரமரணம் அடைந்த செய்தி வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறி உள்ளார். இதே போல பல்வேறு ஒன்றிய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் வெறிச் செயல் குண்டுவெடிப்பில் 10 போலீசார் பலி: வேன் டிரைவரும் பரிதாப சாவு; பாதுகாப்பு படை தேடுதல் வேட்டை appeared first on Dinakaran.

Related Stories: