வேங்கைவயல் விவகாரம்ரத்த மாதிரி பரிசோதனைக்கு வராத 8 பேருக்கு சம்மன்: சிபிசிஐடி முடிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் சந்தேகத்துக்கு இடமான 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகளை எடுக்கவும், பயிற்சி காவலர் உள்ளிட்ட 2 பேரிடம் சென்னையில் உள்ள பகுப்பாய்வு மையத்தில் குரல் பரிசோதனை செய்யவும் கோர்ட் அனுமதி வழங்கியது. இதையடுத்து கடந்த 21ம் தேதி காவலர் உட்பட 2 பேரையும் சிபிசிஐடி போலீசார் சென்னைக்கு அழைத்து சென்று தடயவியல் மையத்தில் குரல் பதிவு செய்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்க வருமாறு 11 பேருக்கு சிபிசிஐடி போலீசார் அழைத்தனர். ஆனால் வேங்கைவயலை சேர்ந்த ஆயுதப்படை காவலர், கீழமுத்துக்காட்டை சேர்ந்த ஒருவர், இறையூரை சேர்ந்த ஒருவர் என 3 பேர் மட்டுமே வந்தனர். அவர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.

இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் கூறுகையில், ரத்த மாதிரி எடுக்கப்பட்ட 3 பேரின் பரிசோதனை அறிக்கை மருத்துவமனை நிர்வாகம் மூலம் கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த அறிக்கை சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்படும். ஏற்கனவே குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தத்தின் மாதிரி, நீரின் மாதிரிகளில் கிடைத்த அறிக்கையோடு, இந்த ரத்த மாதிரி பரிசோதனை அறிக்கை ஒப்பிடப்படும். அதன்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பரிசோதனை முடிவு எப்போது வரும் என்று தெரியாது. ரத்த மாதிரி பரிசோதனைக்கு வராத 8 பேருக்கு, ரத்த மாதிரி பரிசோதனைக்கு வருமாறு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

The post வேங்கைவயல் விவகாரம்ரத்த மாதிரி பரிசோதனைக்கு வராத 8 பேருக்கு சம்மன்: சிபிசிஐடி முடிவு appeared first on Dinakaran.

Related Stories: