சென்னை: குன்றத்தூர் அருகே குடும்ப தகராறின் காரணமாக, விசிக பிரமுகர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கமணி (60). இவருக்கு, குமரேசன் (40), சுகுமார் (38), முரளி (33), அதிஷ் (29) ஆகிய 4 மகன்கள் உள்ளனர். இவர்களில், கடைசி மகனான அதிஷ், விசிக ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி துணை அமைப்பாளராக உள்ளார். இந்நிலையில், அதே பகுதியில் வசித்து வரும் சுகாஷ் (25), சுனில் (22). மெக்கானிக் வேலை செய்து வருகின்றனர். இவர்கள், நேற்று முன்தினம் அதிகாலை அதிஷின் வீட்டிற்கு சென்று, அங்கிருந்த தாத்தா தங்கமணியிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை சரமாரியாக தாக்கினர்.
இதில், மனவேதனையில் இருந்த தங்கமணி, கம்பெனி வேலைக்கு சென்று, நள்ளிரவில் வீடு திரும்பிய கடைசி மகன் அதிஷிடம், குமரேசனின் மகன் சுகாஷ், சுனில் இருவரும் வந்து என்னிடம் தகராறில் ஈடுபட்டு என்னை அடித்துவிட்டு சென்றனர் என்று கூறியுள்ளார். இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த அதிஷ், சுகாஷ் மற்றும் சுனிலிடம் எதற்காக தாத்தாவை அடித்தீர்கள் என்று தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுகாஷ், சுனில் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, அதிஷை சரமாரியாக வெட்டினர். இதில் வலி தாங்கமுடியாமல் தப்பிக்க முன்ற அதிஷை ஓடஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியுள்ளனர். அதிஷின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து தடுத்த அதிஷின் அண்ணன்களான முரளி, சுகுமார் ஆகியோரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.
இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பலத்த காயமடைந்த 3 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அதிஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், அதிஷின் அண்ணன்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், அதிஷ் அடிக்கடி அண்ணன் மகன்களான சுகாஷ் மற்றும் சுனில் ஆகிய 2 பேரையும் அடித்து வந்துள்ளார். இதுவே அதிஷின் கொலைக்கு முக்கிய காரணம் என தெரியவந்தது. இதனையடுத்து, சித்தப்பாவை கொலை செய்த சுகாஷ் மற்றும் சுனில் உள்பட 4 பேரும் நேற்று மாலை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்ததாக கூறப்படுகிறது. இந்த 4 குற்றவாளிகளையும் காவலில் எடுத்து விசாரணை செய்யும் முயற்சியில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
The post குன்றத்தூர் அருகே குடும்ப தகராறில் விசிக பிரமுகர் வெட்டிக்கொலை: குற்றவாளிகள் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்; அண்ணன் மகன்களே தீர்த்து கட்டியது அம்பலம் appeared first on Dinakaran.
