சோழர்கால பெருவழிப்பாதை வணிகம் பழமை மாறாமல் நடக்கும் பண்பாட்டு ஆச்சரியம் காங்கயம் அருகே 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச்சந்தை துவக்கம்

 

காங்கயம்

: காங்கயம் அடுத்துள்ள ஓலப்பபாளையம் அருகே கண்ணபுரத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், சித்ரா பவுர்ணமியை யொட்டி விக்ரமசோழீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா மற்றும் மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி, காங்கயம் இனமாடுகள் சந்தை நடைபெறுவது வழக்கம். பலநூறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த சந்தை தற்போது தொடங்கியுள்ளது. மாடுகனை வாங்க தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் வரதுவங்கியுள்ளனர்.

இந்த ஆண்டு திருவிழா கடந்த 19ம்தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதனையொட்டி மாட்டுச்சந்தையும் கூடியது. இந்த மாட்டு சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதோடு, வாங்கியும் செல்வர். இந்த ஆண்டு கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா வருகிற மே 4ம் தேதியும் 5ம் தேதி மாலை விக்கிரம சோழீஸ்வரர் கோயில் சித்தரா பவுர்ணமி தேரோட்டமும் நடைபெற உள்ளது.

பத்தாம் நுற்றாண்டில் (1088) அபிமான சோழ ராசாத்திராசனால் விக்கிரம சோழீஸ்வரர் கோயில் கட்டப்பட்டு, வீர ராசேந்திர சோழனால் இக்கோயிலுக்கு கொடை வழங்கப்பட்டும், உழவர்கள், வணிகர்களுக்கு வரி விதிக்கப்பட்டு விக்கிரம சோழீஸ்வரர் கோயில் தைப்பூச விழாவும், தினப்பூசைகளும், இதர திருவிழாவும் நடந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.
வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயிலில் உள்ள முருக கடவுள் ஆறு முகங்களுடன்‌ காட்சி தருவது சிறப்பாகும். மேலும் சேரர்களின் முசிறி (கேரளா) துறைமுகம் முதல் சோழர்களின் பூம்புகார் துறைமுகம் வரை செல்லும் இராசகேசரி பெருவழிப் பாதையில் அமைந்துள்ள இக்கோயிலும் ஆண்டு தோறும் நடைபெறும் மாட்டுச் சந்தையும் 1000 ஆண்டுகள் பழமையானதாகும்.
கொரோனாவுக்கு பின் கடந்த ஆண்டு கூடிய சந்தையை காட்டிலும் இந்த ஆண்டு மாடுகள் வரத்து அதிகமாகியுள்ளது. மேலும் புதுக்கோட்டை, திருவாரூ,ர் திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாடுகள் வாங்க வந்துள்ளனர்.

இந்த மாட்டுச்சந்தைக்கு வெள்ளகோவில், திருப்பூர், பொள்ளாச்சி, பல்லடம், கோவை பகுதிகளிலிருந்து காங்கயம் இன மாடுகள், காளைகள், கிடேரிக்கன்றுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மாட்டுச்சந்தையில் விவசாயிகள் நாட்டு மாடு, கன்று குட்டி, காளைகளை வாங்கிச் செல்கிறார்கள். நாட்டு மாடுகளுக்கு என கடந்த 1000 ஆண்டுகளாக நடைபெறும் ஒரே சந்தை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், வேலூர், ஒரத்தநாடு, கரூர், ஈரோடு, மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வந்து காளைகள், வளர்ப்பு மாடுகள், கிடேரிகளை வாங்கிச் செல்கின்றனர். இந்த ஆண்டு மாட்டுச் சந்தையை காண பொது மக்கள் விவசாயிகள் பலரும் குடும்பமாக வந்து செல்கின்றனர். இங்கு 6 மாத இளங்கன்றுகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், நாட்டு பசுமாடுகள் 50 ஆயிரம் முதல் 1.25 லட்சம் வரையும், ஒரு ஜோடி காளைகள் 80 ஆயிரம் முதல் 1.5 லட்சம் வரையும், இனவிருத்திக் காளைகள் 1 லட்சம் முதல் 1.90 லட்சம் வரையும் விற்பனைக்கு வந்துள்ளன.

தற்போது காங்கயம் இனமாடுகளின் முக்கியத்துவம், காங்கயம் இனமாட்டின் பாலில் உள்ள மருத்துவ குணங்கள் என விழிப்புணர்வு மக்கள் மனதில் எழுந்த பின்னர் படிப்படியாக மாடு வளர்ப்போரின் பார்வை காங்கயம் இனமாடுகளின்மேல் விழத்தொடங்கியது. இதனால் தற்போது சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகமானதுடன் விற்பனையும் அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கண்ணபுரம் மாட்டுச்சந்தையையொட்டி காளைகள், மாடுகளுக்குத் தேவையான திருகாணிகள், சாட்டைகள், தும்புக்யிறுகள் உள்ளிட்டவை விற்பனை செய்யும் கடைகள் அதிகளவில் போடப்பட்டிருந்தன. திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாடுகள் வாங்க வருவோரும் சரி கோயிலில் மொட்டைபோட்டு நேர்த்திக்கடன் செலுத்த வருவோரும் சரி திரும்பிச் செல்லும்போது மறவாமல் சாட்டை வாங்கிச் செல்வது தொன்றுதொட்டு நடந்து வருவதாக கடைக்காரர்கள் கூறினர். மாடுகளுக்கு தேவையான தண்ணீர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

The post சோழர்கால பெருவழிப்பாதை வணிகம் பழமை மாறாமல் நடக்கும் பண்பாட்டு ஆச்சரியம் காங்கயம் அருகே 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச்சந்தை துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: