(தி.மலை) கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தர்ணா போராட்டம் போளூர் எஸ்பிஐ வங்கி முன்பு

 

போளூர், ஏப்.21: போளூரில் எஸ்பிஐ வங்கி முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போளூர் தரணி சர்க்கரை ஆலை ₹23 கோடி பாக்கி வைத்து விட்டு 3 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் போளூர் பாரத ஸ்டேட் வங்கி வேளாண் வளர்ச்சி கிளை ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் கரும்பு கடன் பெற்ற விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி மிரட்டி வருகிறது. இதனை கண்டித்தும், நோட்டீசை திரும்ப பெற, கரும்பு கடனை தள்ளுபடி செய்து கடன் இல்லா சான்று வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் வங்கி முன்பாக நேற்று முன்தினம் தர்ணா போராட்டம் தொடங்கினர்.

இதற்கு விவசாயிகள் சங்க செயலாளர் க.பாலமுருகன் தலைமை தாங்கினார். தலைவர் எஸ்.பாண்டுரங்கன் முன்னிலை வகித்தார். தலைவர் வி.வெங்கடேசன் வரவேற்றார். மாநில பொது செயலாளர் த.ரவீந்தரன் கூறுகையில் ‘பிரச்சனைக்கு முடிவுக்கும் வரும் வரை எத்தனை நாள் ஆனாலும் இதே இடத்தில் சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடருவோம். வழக்கம் போல் பேசிவிட்டு செல்ல மாட்டோம்’ என்றார். இதில் மாநில துணை செயலாளர் ப.செல்வன், சிஐடியூ மாவட்ட துணை தலைவர் எம்.வீரபத்ரன், தாலுகா செயலாளர் ஆர்.ரவிதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post (தி.மலை) கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தர்ணா போராட்டம் போளூர் எஸ்பிஐ வங்கி முன்பு appeared first on Dinakaran.

Related Stories: