நன்றி குங்குமம் ஆன்மிகம்
‘ஒருநாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ’ – என்பது மணிவாசகப் பெருமானின் திருவாக்கு. சிவபரம்பொருளுக்குப் பெயரோ உருவமோ ஒன்றும் இல்லை என்று கூறும் மணிவாசகர், திருவாசகத்தின் திருவண்டப் பகுதியில் பரம்பொருளாகத் திகழும் ஈசன் எவ்வளவு விரிந்த வடிவம் உடையவன் என்பதையும், எவ்வளவு நுண்மையானவன் என்பதையும் இரண்டு காட்சிகள் வாயிலாக விளக்குகின்றார்.
அண்டப் பெருவெளியில் உருண்டை உருண்டையாகத் திகழும் கோள்கள் விண்மீன்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டால் அவை நூறு கோடிக்கு மேல் இருக்கும் என்றும் அவை எண்ணிக்கையில் அடங்காமல் மேலும் மேலும் எவ்வாறு விரிவுபெற்றுச் செல்கின்றனவோ அவை அனைத்தையும்விட விரிவுபெற்ற ஒரு வடிவே பெரியோனாகிய ஈசனின் வடிவம் எனக் காட்டுகின்றார். மேலும், கீற்றுக்குடிசை ஒன்றில் உள்ள சிறிய துளை வழியாக ஊடுருவும் சூரிய கிரணத்தில் தென்படும் சிறிய துகள்கள் உள்ளனவே, அவற்றைவிடச் சிறிய வடிவே அவனின் நுணுக்கமான தோற்றம் என்பதையும் விளக்குகின்றார்.
இவ்வாறு அண்டங்களைக் கடந்த பெரிய உருவத்தைத் தன்னுள் கொண்ட திருவடிவமே ஆடவல்லான் எனும் நடராசர் திருவடிவமாகும். உருவமற்ற பிரபஞ்சப் பெருவெளியும் அதன் இயக்கமும் எதுவோ அதுதான் சிவமும், சிவசக்தியுமாகும். அச்சிவபரம்பொருளை, ஆகாச தத்துவத்தை அப்படியே திருக்கோயிற் கருவறைக்குக் கொண்டுவந்து நிறுத்தி வழிபடச் செய்வதே ஆகமங்கள் காட்டும் நெறியாகும்.
இவ்வடிப்படையில்தான் ‘கோயில்’ எனும் தில்லை (சிதம்பரம்) சபாநாயகர் கோயிலிலும், திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலிலும், இராஜராஜேச்சரம் எனும் தஞ்சைப் பெரிய கோயிலிலும் ஆகாச தத்துவமாக விளங்குகின்ற அண்டப் பெருவெளியே வழிபடு தெய்வமாக இடம்பெற்றுள்ள கோயில்களாக விளங்குகின்றன. தில்லை நடராசர் திருவுருவம் திகழ்கின்ற பொன்னம்பலத்தில் ஆடல்வல்லான் திருமேனிக்கு அருகே ‘சிதம்பர ரகசியம்’ எனத் திரையிட்ட ஒரு பகுதியைக் காட்டுவர். அங்கு சுவரில் பொன்னால் செய்யப்பெற்ற வில்வ இலைகள் அலங்கரிக்கப் பெற்றிருக்கும். திரையை நீக்கி அடுக்கு தீபத்தை அங்குக் காட்டி இருளில் ஒளிர்கின்ற அந்த பொன் இலைகளின் ஜொலிப்பை ஒருசில நிமிடங்களே காட்டுவர்.
அதுதான் அண்டப் பெருவெளி எனும் ஆகாசம். அதன் வடிவமாகத் திகழ்பவனே ஆடல்வல்ல மூர்த்தி. திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயில் கருவறையில் லிங்க உருவம் கிடையாது. கருவறைக்கு மேலாக விமானம் கிடையாது. மாறாக, சபாமண்டபமே உண்டு. அது மரத்தாலும் தகடுகளாலும் ஆனதாகும். பெரிய கற்பலகை ஒன்று மூலட்டானத்தில் திகழும். பூசை காலங்களில் புழுங்கல் அரிசி சோறு, பாகற்காய் கறி, கீரை ஆகியவற்றைச் சுடச்சுட ஆவி பறக்கக் கொண்டுவந்து அக்கற்பலகைமேல் கொட்டுவர். அந்த அமுது படியிலிருந்து கிளம்பும் ஆவி சில நிமிடங்களில் ஆகாசத்தில் கலந்துவிடும். அதுவே பரம்பொருளுக்கு நிவேதனம்.
இங்கு ஞானவடிவினனாக உருவமற்ற நிலையிலேயே ஈசன் போற்றப் பெறுகிறான். மாமன்னன் இராஜராஜன் ஆயி ரம் ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த தஞ்சைப் பெரிய கோயில் கருவறை விமானமோ 216 அடி உயரமுடையது. உள்ளே 13 அடி உயரத்தில் ஈசன் பெருவுடையராகக் காட்சி தருகிறான். பீடத்தில் சொருகப்பெற்றுள்ள பாணம் மேலே வட்டமாகவும், பீடத்தின் மேற்பகுதியில் எண்பட்டை வடிவிலும், பீடத்தின் அடிப்பகுதியில் நான்கு பட்டை வடிவிலும் திகழும்.
நான்கு பட்டை உள்ள தூண் பகுதி பிரம்மனாகவும், எண்பட்டைப் பகுதி விஷ்ணுவாகவும், வட்டத்தூண் பகுதி சிவனாகவும் கருதப் பெறுகின்றது. இங்கு பிரமபாகம் பொதிந்துள்ள தாமரைப்பீடம் 55 அடி சுற்றளவும், 2½ அடி உயரமும் கொண்ட 9 கற்களின் இணைப்பாலும் உருவானதாகும். விஷ்ணுபாகம் திகழும் பீடப் பகுதி 55 அடி சுற்றளவு, அதனுடன் இணைந்த 5 அடி நீள நீர்க்கோமுகம் ஆகியவற்றோடு 3½ அடி உயரத்தில் மூன்று கற்களின் இணைப்பால் ஆனதாகும்.
வெளியே தெரியும் சிவபாகமாகிய பாணம் பீடத்திற்கு மேலாக 17 அடி சுற்றளவோடு 7 அடி உயரத்தில் திகழ்கின்றது. இங்கு உற்சவமூர்த்தியாகத் திகழ்பவர் தட்சிணமேரு விடங்கர் எனும் ஆடவல்லானாவார். இக்கோயிலின் ஆகமம் மகுடாகமமாகும். இந்தப் பிரம்மாண்டமான லிங்கத்திற்கு ஆகம வழி நிகழ்த்தப்பெற்ற வழிபாடு பீடத்தில் தொடங்கி நிறைவாக விமானத்தின் உட்கூடாகத் திகழும் வெற்றிடத்தில் நிறைவுபெறும். இங்கு உருவமற்ற ஆகாசம்தான் சிவமாகப் போற்றப் பெறுகின்றது.
பெருவுடையார் இலிங்கத்தை அர்ச்சித்து வழிபாடு செய்யும்போது முதலில் லிங்க பாணத்தின் அடிப்பகுதியான பிரம்மனுக்கும், அடுத்து அதற்கு மேலாக விளங்கும் விஷ்ணுவுக்கும் வணக்கம் கூறிய பின்பு மேலுள்ள வட்டத்தூண் வடிவில் திகழும் பாணத்தை ஆறு பிரிவுகளாகப் பகுத்து கீழிருந்து முறையே ருத்திரன், மகேசன், சதாசிவன், பரபிந்து, பரநாதம், பராசக்தி எனப் போற்றி அறுவகை வணக்கம் செலுத்திய பிறகு நிறைவாக ஒன்பதாவது நிலை வழிபாடாக ‘பரசிவம்’ எனக் கூறி இலிங்கத்திற்கு மேலுள்ள வெற்றிடம் நோக்கி மலர் வணக்கம் மேற்கொள்ளப்பெறும். அதுவரை பெருவுடையார் லிங்கம் மட்டுமே சிவமாக இருந்த நிலை மாறி இலிங்கத்திற்கு மேலாகத் திகழும் ஆகாசம் சிவமாக விளங்கும்.
பின்பு செய்யப் பெறுகின்ற அனைத்து வழிபாடுகளும் அந்த ஆகாச தத்துவமாக விளங்குகின்ற வெற்றிடத்திற்கே உரியதாகும். இதனைத்தான் சிவஞானசித்தியார் ‘நவந்தரும் பேதம்’ எனக் குறிக்கும்.தஞ்சைப் பெரியகோயிலை இராஜராஜன் எடுத்தபோது கருவறை விமானத்தை அடுக் கடுக்காகக் கட்டாமல் தரையிலிருந்து உச்சிக் கலசம் வரை ஒரே உட்கூடாகத் திகழுமாறு அமைத்ததோடு மகாமண்டபத்தை மேலே இருதள அமைப்புடன் கூடங்கள் இருக்குமாறு அமைத்தான். கருவறையின் மேல்நிலையில் சாந்தாரம் எனும் சுற்று அறை ஒன்றினை அமைத்து அதில் சிவபெருமானே ஆடிக்காட்டும் 108 நாட்டியக் கரணச் சிற்பங்களை இடம்பெறச் செய்துள்ளான்.
கீழே பெருவுடையார் எனும் லிங்கத்திற்கு அபிடேக ஆராதனை நிகழும்போது, மேல் நிலையில் உள்ள இரண்டு தளங்களிலும் 400 ஆடல் மகளிர் நின்றுகொண்டு ஆடல் பாடல் ஆகியவற்றோடு விமானத்தின் உட்கூடாகத் திகழும் பரவெளியைப் பரசிவமாக – ஆடவல்லானாகப் பாவித்து மலரஞ்சலி செலுத்துவர். எனவே, தஞ்சைப் பெரியகோயிலிலுள்ள பிரகதீஸ்வரர் (பெருவுடையார்) எனும் இலிங்கத்தைவிட அதற்கு மேலாக உச்சியில் கலசபீடம் வரை உள்ள விமானத்தின் உட்கூடே ஆடவல்லானின் உருவமற்ற உருவமாகப் போற்றப் பெற்றது. சோழராட்சிக்குப் பின்பு தஞ்சைப் பெருங்கோயில் பல்வேறு பேரழிவுகளை எதிர்கொள்ள நேர்ந்தபோது மகாமண்டபத்தின் மேலிரு தளங்களும் இடிந்தன.
பிற்காலத் திருப்பணிகளின்போது அவை மீண்டும் கட்டப் பெறாததோடு, கருவறையின் உட்புறம் இலிங்கத்திற்கு மேலாக ஒரு புதிய தளத்தையும் ஏற்படுத்தி விட்டனர். இதனால் தற்போது பரசிவ வடிவத்தினை (ஆகாச தத்துவத்தை) மேல் தளம் சென்றால்தான் தரிசிக்க முடியும். பரசிவம் எனும் வடிவமில்லாத பெருவெளியே ஆனந்தம் என்பதாகும். அப்பிரபஞ்ச இயக்கமே பரமானந்தம் எனப்பெறும். அந்த பரமானந்தத்தின் உருவகமே ஆடல்வல்லான் எனும் நடராசர் திருவடிவமாகும். அண்டப் பெருவெளியைக் குறிப்பதே திருவாசி எனும் வட்ட உருவமும் அதன் நடுவண் அமைந்த வெற்றிடமும் ஆகும்.
அதில் மிதந்துகொண்டு ஒளிரும் கோடானு கோடி அண்டங்களைச் சுட்டுவதே திருவாசியின் வட்ட விளிம்பில் காணப்பெறும் சுடர் வடிவங்களாகும். ஆகாச தத்துவத்தை தெளிவாகக் காட்டுவதற்கென்றே ஒரு ஆடவல்லான் செப்புத் திருமேனி ஒன்றினை தஞ்சையில் வாழ்ந்த ஒரு சிற்பி வடித்துக் காட்டி இருக்கிறான். அந்த ஆடவல்லானின் வட்டத் திருவாசியின் மேற்பகுதியில் இரு பக்கங்களிலும் வானில் மிதக்கும் சூரியன் சந்திரன் ஆகிய இருவரின் உருவங்களை அமைத்துள்ளான். இம்மாதிரியான திருமேனிகள் மிக அபூர்வமான படைப்புகளாகும்.
இரவனாம் எல்லி நடம் ஆடியாம்
எண்திசைக்கும் தேவனாம் என் உளானாம்எனத் திருக்கருகாவூர் தேவாரத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் சுட்டும் ஆகாசமூர்த்தியே ஆடவல்லான் என்பதை நமக்குக் காட்டி நிற்பவைதான் இந்த அரிய ஆடல்வல்லான் திருமேனியும் அதன் திருவாசியில் திகழும் சூரிய சந்திரர்களும்.
தொகுப்பு: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
The post ஆடவல்லான் திருவுருவில் ஆகாசம் காட்டும் சூரியனும் சந்திரனும் appeared first on Dinakaran.