குஜிலியம்பாறையில் லேசான நில அதிர்வு

குஜிலியம்பாறை, ஏப். 16:குஜிலியம்பாறையில் நேற்று மாலை ஏற்பட்ட நில அதிர்வால் கட்டிடங்கள் குலுங்கியது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே அலறி அடித்து ஓடினர். திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், குஜிலியம்பாறை, வேடசந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது பலத்த வெடிச்சத்தம் கேட்பதும் கட்டிடங்கள் குலுங்குவது வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு வெடிச்சத்தம் கேட்கும் போது கட்டிடங்கள் குலுங்குவதால், மக்கள் செய்வதறியாமல் வீட்டை விட்டு அலறி அடித்து வெளியே ஓடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது.

இந்நிலையில் குஜிலியம்பாறையில் நேற்று மாலை 5.10 மணிக்கு திடீரென லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வால் கட்டிடங்கள் குலுங்கியது. மேலும் கடை மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்ட கண்ணாடிகள் அதிர்ந்தது. இது மட்டுமன்றி கடை ஷட்டர் கதவுகளும் அதிர்ந்தது. திடீரென கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் செய்வதறியாமல் வெளியே ஓடி வந்தனர். இதே போல் கடந்த 10ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காலை 11.40 மணி அளவில் பலத்த வெடி சத்தம் போன்ற சிறு அதிர்வு உணரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

The post குஜிலியம்பாறையில் லேசான நில அதிர்வு appeared first on Dinakaran.

Related Stories: