முதல்வரின் நீர் நிலை பாதுகாவலர் விருது திட்டத்திற்கு வரவேற்பு

திருத்துறைப்பூண்டி, ஏப். 16: முதல்வரின் நீர்நிலை பாதுகாவலர் விருது திட்டத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீர்நிலைகளை பாதுகாக்கும் விதமாக, தமிழக சட்டபேரவை மானிய கோரிக்கையில் முதலமைச்சர் நீர்நிலை பாதுகாவலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் கூறுகையில், தற்போது பிளாஸ்டிக் கழிவுகள், கட்டிட கழிவுகள், கழிவுநீர் போன்றவை மூலம் நீராதாரங்களான ஆறு, வாய்க்கால், குளம், குட்டை, கண்மாய், ஓடை, ஏரி போன்றவை மாசுபட்டுள்ளது. அபாயகரமான புதிய நோய்கள் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், கால்நடைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தனி நபர்களின் ஆக்கிரமிப்புகளினாலும், வெங்காயதாமரையினாலும் நீர்நிலைகளின் பரப்பு சுருங்கி வருகிறது. இதனால் ஆற்றுநீரையும், மழைநீரையும் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரும் பாதைகள், வெளியேறும் வடிகால்கள் முற்றிலும் தூர்க்கப்பட்டுவிட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாகவும், தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்கும் தண்ணீர் தேவை அதிகரித்து வரும் நிலையில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உப்புநீர் உள்ளே புகும் அபாயம் ஏற்படும்.

இதனால் குடிநீர் தேவைக்கு சிரமப்படும் நிலையும், விவசாயம் சார்ந்த தொழில் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். மழை காலங்களில் தண்ணீர் வடியாமல் வெள்ள பாதிப்பு ஏற்படும். இதற்கெல்லாம் ஒரே தீர்வாக நீர்நிலைகளை சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டும் தமிழக அரசு அறிவித்துள்ள முதலமைச்சர் நீர்நிலை பாதுகாவலர் விருதின் மூலம் பலர் இப்பணியை மேற்கொள்ள முன் வருவார்கள், மேலும் இவர்களுக்கு அரசு சட்ட பாதுகாப்பும், உரிய அங்கீகாரமும் வழங்க வேண்டும் என்றார்.

The post முதல்வரின் நீர் நிலை பாதுகாவலர் விருது திட்டத்திற்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: