சித்திரை முதல்நாளை யொட்டி எட்டயபுரம், குளத்தூர் பகுதியில் பொன்ஏர் திருவிழா

எட்டயபுரம் : சித்திரை முதல்நாளான நேற்று எட்டயபுரம், குளத்தூர் பகுதி விவசாயிகள் பொன்ஏர் திருவிழா கொண்டாடினர்.சித்திரை மாதம் முதல்நாள் மானாவாரி விவசாயிகள் ஒன்று கூடி தங்களது கிராமத்தில் பொதுவான நிலத்தை தேர்வுசெய்து நல்லநேரம் பார்த்து நிலத்தின் மையப்பகுதியில் விவசாயகருவிகள், நவதானியங்கள் வைத்து பூமியையும் சூரியனையும் வணங்கி உழவிட்டு விதைத்து முதல் பணியை துவங்குவார்கள். அன்றிலிருந்து விவசாயிகள் தங்களது நிலங்களை பண்படுத்தி உழவிட துவங்குவார்கள். காலங்காலமாக சித்திரை முதல்நாள் விவசாய பணிகளின் துவக்க நாளாக விவசாயிகள் கொண்டாடுகின்றனர்.

மேலும் அந்த முதல் நாள் உழவிடுவதை பொன் ஏர் திருவிழாவாக விவசாயிகள் கொண்டாடுகின்றனர். பொன்னேர் பூட்டி உழுது விதைத்து வீடு திரும்பும் விவசாயிகளை கிராமப்பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வரவேற்பார்கள். வழக்கம் போல் இந்த ஆண்டும் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள சுரைக்காய்பட்டி, பிதப்புரம் கிராமங்களில் பொன்னேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிதப்புரத்தில் விவசாயிகள் ராமசுப்பு, ஞானசேகரன், எட்டப்பன் ஆகியோர் தலைமையிலும் சுரைக்காய்பட்டியில் பஞ்சாயத்து தலைவர் முத்து, விவசாயிகள் மகேஷ், செல்வராஜ், சுந்தர்ராஜ், ரெங்கராஜ், கிருஷ்ணசாமி உட்பட விவசாயிகள் தலைமையிலும் பொன்னேர் திரு விழா நடந்தது. இதில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.

குளத்தூர்: குளத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான புளியங்குளம், வைப்பார், சூரங்குடி, வேடநத்தம், கொல்லம்பரம்பு, முத்துராமலிங்கபுரம், த.சுப்பையாபுரம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் சித்திரை முதல் நாளான நேற்று அதிகாலை தங்களது டிராக்டர், காளைகள் மற்றும் மாட்டு வண்டிகளை சுத்தம் செய்து அலங்காரத்துடன் தயார் படுத்தி விநாயகர் கோயிலுக்கு சென்று நவதானியம், வாச்சாத்து, கலப்பை போன்றவைகளுக்கு பூஜை செய்தனர்.

பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக விவசாய நிலங்களுக்கு டிராக்டர்கள் மூலம் சென்ற விவசாயிகள். கிழக்கு முகமாக சூரிய பகவானை வேண்டி மாரி மூளையில் டிராக்டர்களை அணிவகுத்து உழவு பணிகளை மேற்கொண்டு நவதானிய விதைகளை நிலங்களில் விதைத்து பொன்னேர் திருவிழாவை கொண்டாடினர்.

டிராக்டர்களுக்கு மரியாதை

ஆரம்பகாலங்களில் விவசாயிகள் தங்களது நிலத்தில் உழவிட்டு பண்படுத்தி விதைப்பதற்கும் நிலத்தில் விளைந்த பொருட்களை வண்டி மூலம் களத்து மேட்டிற்கு கொண்டு செல்வதற்கும் களத்துமேட்டில் பிரித்தெடுத்த நவதானியங்களை சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்வதற்கும் என விவசாயின் முழு உழைப்பையும் காசாக்கும் வரை உழவனின் உற்ற தோழனாக இருந்தது உழவு மாடுகள் தான்.

எனவே, தைமாதம் மாட்டுப்பொங்கல் நாளிலும் சித்திரை முதல் நாளிலும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமான உழவுமாடுகளுக்கு விவசாயிகள் மரியாதை செய்து மகிழ்கின்றனர். சித்திரை முதல் நாள் பொன்னேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்ட காலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முடிவுக்கு வந்தது. தற்போது விவசாய வேலைகளுக்கு டிராக்டரை முழுமையாக பயன்படுத்த துவங்கியதால் பொன்ஏர் திருவிழாவும் அறிவியல் மயமாகிபோனது.

The post சித்திரை முதல்நாளை யொட்டி எட்டயபுரம், குளத்தூர் பகுதியில் பொன்ஏர் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: