சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசுகையில், ‘‘தமிழகத்தில் உருமாறிய வைரஸ் பரவல் 400 ஆக அதிகரித்துள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், பூஸ்டர் டோஸ் போட்டவர்கள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ், கேரளாவில் அதிக அளவு உள்ளதாக செய்திகள் வருகின்றன. எனவே, தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்’’ என்றார். அதேபோல, செல்வபெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), சதன் திருமலை குமார் (மதிமுக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) வேல்முருகன் (தவாக), ஈஸ்வரன் (கொமதேக) ஆகியோர் பேசினர். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: ஒமிக்ரானின் புதிய உருமாற்ற வைரஸான XBB.1.16 மற்றும் BA2 என்கின்ற வைரஸ்கள் புதிதாக பரவிக்கொண்டிருக்கிறது. கொரோனா பரவல் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னால், இந்தியாவில் 50க்கும் கீழ்தான் இருந்தது.
தமிழ்நாட்டில் ஒன்றரை மாதத்துக்கு முன்பு 2 ஆக பரவல் இருந்தது. நேற்றைக்கு 386 என்று உயர்ந்திருக்கிறது. கேரளாவை பொறுத்தவரை 2273 பேருக்கும், டெல்லியில் 484 பேருக்கும் இமாச்சல பிரதேசத்தில் 432 பேருக்கும், தமிழ்நாட்டில் 386 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழக மருத்துவமனையில் உள்ள வசதிகளை கலெக்டர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இப்போது வந்திருக்கும் ஒமைக்ரான் மூன்றாவது அலை XBB.1.16 இந்த பாதிப்பு என்பது இதற்கு முன்னர் பேசியது போல குழு பாதிப்பாக இல்லை. இது மிதமான தொற்று பாதிப்பாக தொண்டை வலி, சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி போன்றவை தான் இருந்து கொண்டிருக்கிறது. தற்போதைய பாதிப்பு தனிநபர்களுக்கே பதிவாகி வருகிறது, குழு பாதிப்பு பதிவாகவில்லை. எனவே பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்படவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. பொது மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டியது இல்லை. பாதிப்பு என்பது 500, 1000 என்று அதிகரிக்கும் போது தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது என்பது கட்டாயம் கொண்டுவரப்படும்.
The post தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு appeared first on Dinakaran.