சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், நன்மங்கலம் பெரும்பாக்கம் பகுதியில் மின் புதைவடம்: பேரவையில் அரவிந்த் ரமேஷ் வலியுறுத்தல்

சோழிங்கநல்லூர்: பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் (திமுக) பேசியதாவது: சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 1,276 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின் புதைவடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளில், இன்னும் மீதம் உள்ள பகுதிகளான, கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், உத்தண்டி, ஜல்லடையன்பேட்டை பெரும்பாக்கம், நன்மங்கலம், ஒட்டியம்பாக்கம், சித்தாலப்பாக்கம் பகுதிகளில் இன்னும் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி துவங்கப்படாமல் உள்ளது.

அதேபோல் உள்ளகரம், புழுதிவாக்கத்தில் மிகவும் மின் அழுத்தம் குறைபாடு ஏற்படுகின்றது. அங்கு துணை மின் நிலையத்தை அமைத்துத் தரவேண்டும். மதுரவாயல் தொகுதியிலும் இதேபோல மின் புதைவடம் வேண்டுமென்று நம்முடைய உறுப்பினர் கேட்டிருக்கின்றார். அதேபோல நம்முடைய பகுதிகளில் உடனடியாக மேலே செல்கின்ற கம்பிகளை மாற்றி, மின் புதைவடமாக மாற்றி அமைக்க வேண்டும்’ என்றார்.இதற்கு பதில் அளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், ‘சோழிங்கநல்லூர் தொகுதியில் புதைவட கம்பிகள் அமைப்பதற்கான முழு அனுமதியை முதல்வர் வழங்கியிருக்கின்றார்.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, இந்த ஆண்டு முழுவதுமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, சென்னையில் இருக்கக்கூடிய மேல்நிலை மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்றிட வேண்டும் என்று மின்சார துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார். எனவே, அதற்கான பணிகள் தொடங்கப்படும். சோழிங்கநல்லூர் தொகுதியை பொறுத்தவரை சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 5 புதிய துணை மின் நிலையங்களுக்கு முதல்வர் அனுமதிகளை வழங்கியிருக்கிறார். வரக்கூடிய இந்த ஆண்டு அதற்கான பணிகள் தொடங்கப்படும்’ என்றார்.

The post சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், நன்மங்கலம் பெரும்பாக்கம் பகுதியில் மின் புதைவடம்: பேரவையில் அரவிந்த் ரமேஷ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: