2024 மக்களவை தேர்தலில் 300 இடங்களில் பாஜ வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும்: அசாமில் அமித்ஷா சூளுரை

திப்ருகர்: ‘அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜ 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று தொடர்ந்து 3வது முறையாக மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும்’ என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அசாமில் பேசி உள்ளார். அசாமின் திப்ருகரில் மண்டல பாஜ அலுவலகத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டிய, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பின்னர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது: வடகிழக்கு மாநிலங்கள் ஒருகாலத்தில் காங்கிரசின் கோட்டையாக இருந்தன. ஆனால், ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்ட போதிலும், இங்கு சமீபத்தில் நடந்த 3 மாநில தேர்தலில் பாஜ கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. வடகிழக்கில் பாஜவுக்கு வெற்றி தந்த முதல் மாநிலம் அசாம். அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலில் அசாமில் உள்ள 14 தொகுதிகளில் 12ல் வெற்றி பெறுவோம்.

மேலும், 2024 மக்களவை தேர்தலில் பாஜ 300க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கும். தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பார். காங்கிரஸ் தலைவர் ராகுல் அந்நிய மண்ணில் இந்தியாவை அவமதிக்கிறார். இதை இனியும் அவர் தொடர்ந்தால், வடகிழக்கில் காங்கிரசுக்கு அனைத்து கதவுகளும் மூடப்பட்டது போல, நாடு முழுவதிலும் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விடும். அவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு பிரதமர் மோடியை விமர்சிக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு தாமரை மலர்ந்து கொண்டே இருக்கும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

The post 2024 மக்களவை தேர்தலில் 300 இடங்களில் பாஜ வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும்: அசாமில் அமித்ஷா சூளுரை appeared first on Dinakaran.

Related Stories: