பேரணாம்பட்டு அருகே போர்க்காலத்தில் வீர மரணம் அடைந்த பெண் படை தளபதியின் நினைவு சிலை கண்டெடுப்பு-17ம் நூற்றாண்டை சேர்ந்தது

பேரணாம்பட்டு : வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் குடியாத்தம் திருமகள் கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ஜெயவேல் மற்றும் வரலாற்று பிரிவு மாணவர்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு நினைவுகள் படைப்பு சிற்பங்கள் ஆநிரை கல் ஆகியவற்றை கண்டெடுத்து வருகின்றனர். இதுகுறித்து வரலாற்று துறை பேராசிரியர் ஜெயவேல் கூறியதாவது:

பேரணாம்பட்டு அடுத்த சின்னதாமல் ஊராட்சிக்குட்பட்ட சப் ஸ்டேஷன் கிராமத்தில் குப்பன், தணிகாசலம் ஆகியோருக்கு சொந்தமான 10 ஏக்கர் தென்னந்தோப்புடன் கூடிய விவசாய நிலத்தில் நெற்பயிர்களுக்கான வரப்பில் பெண் படை தளபதியின் நினைவு சிலை அமைந்துள்ளது. இது 17ம் நூற்றாண்டை சேர்ந்தது ஆகும். இதில் 7 வரிகள் கொண்ட தமிழ் சொற்கள் கல்வெட்டு சிற்பத்தில் உள்ளது.

சிற்பத்தில் இருக்கக்கூடிய 7 வரி கல்வெட்டுகள் இப்போது இருக்கக்கூடிய நடைமுறை தமிழில் தான் உள்ளது. அதில் உள்ள தமிழ் எழுத்துக்கள் சிதைந்த நிலையில் உள்ளதால் படிப்பதற்கு சிரமமாக உள்ளது.

இந்த சிலை 4 அடி உயரமும் 2 அடி அகலமும் உள்ளது. இவை வேலூர் பாளையத்துக்கு உட்பட்ட அன்றைய காலத்து படுகூர் கோட்டத்திற்கு உட்பட்ட பேரணாம்பட்டில் போர்க்காலத்தில் வீர மரணம் அடைந்த பெண் படை தளபதியின் புடைப்பு சிற்பமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இடது கையில் எதிரிகளின் போர் ஆயுதங்கள் தடுப்பதற்கான கேடயமும், வாள் ஏந்தியவாறும் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post பேரணாம்பட்டு அருகே போர்க்காலத்தில் வீர மரணம் அடைந்த பெண் படை தளபதியின் நினைவு சிலை கண்டெடுப்பு-17ம் நூற்றாண்டை சேர்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: