அவினாசி ரோடு மேம்பால பணிக்காக மின் கம்பங்களை இடம் மாற்ற திட்டம்

கோவை, ஏப்.11: கோவை அவினாசி ரோட்டில் 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு எலிவேட்டர் காரிடார் என்ற நீண்ட தூர மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. 1,627 கோடி ரூபாய் செலவில் துவங்கிய இந்த பணிகளுக்காக மேம்பால தூண்கள் மற்றும் இணைப்பு கர்டர்கள் அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது. அண்ணா சிலை, நவ இந்தியா சந்திப்பு, ஹோப் காலேஜ், விமான நிலைய ரோடு சந்திப்பு பகுதியில் வாகனங்கள் ஏறி இறங்கும் வகையிலான ரேம்ப் அமைக்கும் பணி நடக்கிறது. மேம்பால பணிக்காக அவினாசி ரோட்டில் இருபுறமும் 1.60 எக்டர் நிலப்பரப்பிலான இடங்கள் கையகப்படுத்தப்படும். பெரிய கட்டிடங்கள் எதுவும் இடிக்கப்படமாட்டாது. காம்பவுண்ட் சுவர் மற்றும் கட்டிடங்களின் சிறு பகுதியை இடித்து நிலம் கையகப்படுத்தி பணிகளை வேகமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேம்பாலம் கட்டும் பகுதியில் சுமார் 500 உயர்ந்த கட்டுமானங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த கட்டுமானங்களை இடிக்காமல் பணிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கையகப்படுத்த வேண்டிய இடங்களை காலி செய்ய ஏற்கனவே மாநில நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கட்டிடங்கள் இடிப்பு மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிக்காக சுமார் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும், இறங்குபாலம் மற்றும் ஏறும் பாலம் அமைக்கும் பணி வேகமாக நடத்தப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்திருந்தனர். 8 இடத்தில் ஏறு, இறங்கு பாலம் அமைக்கப்படும். தற்போது 4 இடத்தில் பணிகள் நடக்கிறது. சில இடங்களில் மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், சந்திப்பு மின் பெட்டிகள் இடம் மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. இந்த பணிகள் முடிந்த பின்னர் இறங்கு, ஏறு மேம்பால பணிகள் நடத்தப்படவுள்ளது.

மேம்பால பணிகளுக்காக இதுவரை 2.2 கிமீ தூரத்திற்கு கர்டர்கள் என்ற இணைப்பு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சுமார் 8 கிமீ தூரத்திற்கு கர்டர்களை மேம்பால தூண்களில் பொருத்த வேண்டியிருக்கிறது. இதற்காக ராட்சத கிரேன்கள் தயாராக இருக்கிறது. தென்னம்பாளையம் பகுதியில் பிளான்ட் அமைத்து கர்டர்கள் உருவாக்கும் பணி நடக்கிறது. ஒரு கர்டர் உருவாக்க 28 நாட்கள் தேவைப்படுகிறது. கர்டர்களை வாகனத்தில் கொண்டு வந்து இணைப்பு தூண்களில் பொருத்த அதிக நாட்கள் தேவைப்படுகிறது. இன்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்டர்கள் தயாரித்து தூண்களில் பொருத்தி இணைக்க வேண்டியிருக்கிறது அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது 45 சதவீத பணிகள் முடிந்து விட்டது என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

The post அவினாசி ரோடு மேம்பால பணிக்காக மின் கம்பங்களை இடம் மாற்ற திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: