துவரங்குறிச்சி அடுத்த மருங்காபுரி பகவதிஅம்மன் கோயில் திருவிழா

துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அடுத்த மருங்காபுரி பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று பால்குட உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அடுத்த மருங்காபுரி ஜமீனுக்கு சொந்தமான பகவதிஅம்மன் கோயில் சுமார் ஐநூறு ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலில் ஆண்டுதோறும் திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியான பால்குடவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த ஏப்ரல் 2ம் தேதி பூச்சொரிதல், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக பால்குட உற்சவம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி அய்யாகுளம் இரட்டை விநாயகர் கோயிலில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, அலகு குத்தியும் மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு அரண்மனை மற்றும் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பகவதி அம்மன் கோயிலுக்கு வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்தனர். இன்று காலை பூக்குழி நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருங்காபுரி ஜமீன்தாரும், பரம்பரை அறங்காவலருமான ரெங்ககிருஷ்ண குமார விஜய பூச்சய நாயக்கர் செய்திருந்தார்.

The post துவரங்குறிச்சி அடுத்த மருங்காபுரி பகவதிஅம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: