ஆலந்தூர் மார்க்கெட் பகுதியில் சாலையில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்: வியாபாரிகள் அடாவடி

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், 161வது வார்டுக்கு உட்பட்ட எம்.கே.சாலையில் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு அதிகளவில் கடைகள் உள்ளதால் தினசரி காலை, மாலை, இரவு என தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகளின் உரிமையாளர்கள், குப்பையை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். இதற்காக, தங்களது கடைகளில் தனித்தனியே குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும், என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. ஆனால், இங்குள்ள கடை உரிமையாளர்கள் பலர் இதை கடைபிடிப்பதே இல்லை.

மேலும், கடைகளில் உள்ள குப்பையை அங்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்காமல், இரவு 11 மணிக்கு மேல் கடைகளை மூடும்போது, கடையில் உள்ள குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் வீசிச் செல்கின்றனர். குறிப்பாக ஜவுளிக்கடை, பேன்சி ஸ்டோர்ஸ் மற்றும் பல சரக்கு கடை போன்றவற்றில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை மூட்டையாக கட்டி, சாலையில் வீசிவிட்டு சென்று விடுகின்றனர். அவ்வழியே செல்லும் வாகனங்கள் அவற்றின் மீது ஏறி செல்வதால் மூட்டைகள் அவிழ்ந்து சாலையில் பிளாஸ்டிக் கழிவுகள் சிதறி காற்றில் சாலை முழுவதும் பரவிவிடுகிறது. இதனால், இரவு நேர பணி முடிந்து வீட்டிற்கு செல்லவேண்டிய தூய்மை பணியாளர்கள், இந்த பிளாஸ்டிக் குவியலால், அதிகாரிகளுக்கு பயந்து மீண்டும் அந்த கழிவுகளை அகற்றிவிட்டுல வீட்டிற்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.

எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதிக்க வேண்டும், மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் கொட்டும் வியாபாரிகளை அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் கண்டறிந்து அபராதத்துடன் தண்டனையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post ஆலந்தூர் மார்க்கெட் பகுதியில் சாலையில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்: வியாபாரிகள் அடாவடி appeared first on Dinakaran.

Related Stories: