ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

திருச்சி: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா வரும் 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 19ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைத்தேர், பங்குனி தேர் விழாக்களில் சித்திரை மாதம் நடைபெறும் தேர் திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த விழா 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடனை நிறைவேற்றி செல்வார்கள். இந்தாண்டு சித்திரை தேர்த் திருவிழா வரும் 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். 5 மணிக்கு கொடிமரம் மண்டபம் வந்து சேருகிறார். 5 மணிக்கு கொடிப்படம் புறப்பாடு நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் மேஷ லக்னத்தில் சித்திரை தேர்திருவிழாவின் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 7.45 மணிக்கு கொடி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு 8 மணிக்கு கண்ணாடி அறைக்கு வந்து சேருகிறார். அங்கு காலை 8.30 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை சேவை சாதிக்கிறார். அதனை தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை பேரிதாடனம் நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். பின் இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபத்திற்கு வந்து சேர்கிறார்.

இரவு 9 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளுகிறார். தொடர்ந்து அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார். விழாவின் 2ம் நாளில் மாலை கற்பக விருட்சம், 3ம் நாளில் காலை சிம்ம வாகனம் மாலை யாளி வாகனம், 4ம் திருநாளான 14ம் தேதி அதிகாலை இரட்டை பிரபை, மாலை 6 மணிக்கு நம்பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 5ம் நாளில் அதிகாலை சேஷ வாகனம், மாலை அனுமந்த வாகனம், 6ம் நாளில் அதிகாலை ஹம்ச வாகனம், மாலை யானை வாகனத்தில் வீதி உலா வருகிறார். 7ம் நாளான 17ம் தேதி நம்பெருமாள் நெல் அளவு கண்டருளுகின்றார். 8ம் நாளில் மாலை தங்க குதிரை வாகனத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9ம் திருநாளான 19ம் தேதி காலை 6 மணிக்கு சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது. 11ம் நிறைவு நாளான 21ம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாக்காலமான 11ம் தேதி முதல் 20ம் தேதி வரை விஸ்வரூப சேவை கிடையாது. சித்திரை தேரோட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான கிராமப்புற பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: