கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டி: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் நிருபர்களிடம் பேசிய பண்ருட்டி ராமசந்திரன் கூறியதாவது: அதிமுக அரசியல் மாயை வலையில் சிக்கி இருக்கிறது. அதிமுக பொதுக்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் முறைப்படி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தலைமை அவர்களை நியமிக்கிறது. அவர்கள் எல்லாம் சேர்ந்து தலைமையை நியமிக்கின்றனர். இந்த பொதுக்குழு சரி இல்லை என்று நீதிமன்றம் சென்றோம். சென்னை உயர்நீதிமன்ற அமர்வு இந்த பொதுக்குழு செல்லும் என்றார்கள்.

பொதுக்குழுவே செல்லும் என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், தீர்மானம் செல்லாமல் போய்விடுமா என கூறிவிட்டது. தொண்டர்களால் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பார்கள் என எம்.ஜி.ஆர். கூறியது என்னவாயிற்று, நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் கூறிய நிலையில் புதிய பொதுச்செயலாளர் தேவை ஏன்?

ஒருங்கிணைப்பாளரை நீக்கியது இயற்கையின் நீதிக்கு புறம்பானது அல்லவா என்பதற்கு எல்லாம் பதில் இல்லை. நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகள் கால்பந்தாட்டத்தில் உதைபடும் பந்து போல, அலைக்கழிக்கப்படுகிறது. எங்கள் நிலையை மக்களிடம் எடுத்து சொல்வதற்கு வரும் 24ம் தேதி திருச்சியில் மாபெரும் மக்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். அது முப்பெரும் மாநாடாக நடத்த தீர்மானித்து உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: எடப்பாடி பழனிசாமி நடத்தும் செயற்குழுவாக இருந்தாலும் சரி, பொதுக்குழுவாக இருந்தாலும் சரி அது சட்டவிரோதமானது. பிரதமரை வாய்ப்பு இருந்தால் சந்திப்போம். நீதிமன்றத்தில் கழக சட்டப்படி எடுத்து வைத்த வாதம் அடிப்படையில் தீர்வு கிடைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை பற்றி ஆளுநர் கூறிய நிலையில் அதற்கு கருத்து கூற விரும்ப வில்லை.

கர்நாடக தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்துவோம். திருச்சி மாநாட்டில் எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா எந்த நோக்கத்திற்காக இக்கட்சியை ஆரம்பித்தார்களோ அங்கே அது நிரூபணமாகும். 2026 வரை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உள்ளது. ஆனால் சட்டவிதிகளுக்கு புறம்பாக சர்வாதிகார பணபலம் படைத்தவராக செயல்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

The post கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டி: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: