‘காந்தி, குஜராத் கலவரம், ஆர்எஸ்எஸ் தடை’; என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களிலிருந்து நீக்கம்: ஒன்றிய அரசின் நடவடிக்கையால் சர்ச்சை

புதுடெல்லி: தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் பாடப் புத்தகத்தில் காந்தியின் இந்து-முஸ்லிம் ஒற்றுமை, ஆர்எஸ்எஸ் தடை பற்றி பாடங்கள் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக் கல்வி தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காக ஒன்றிய அரசின் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆர்டி) தொடங்கப்பட்டது. இந்நிலையில், என்சிஇஆர்டி.யின் இணைய தளத்தில், ‘’கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் பாடச்சுமையை குறைக்கும் பொருட்டு சில பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. தேசிய கல்வி கொள்கை 2020, புதிய பாடத்திட்டத்துக்கு வாய்ப்பளிக்கும் வகையில் பயிற்சியுடன் கூடிய கற்றலை ஊக்குவிக்கிறது. அதன் அடிப்படையில், அனைத்து வகுப்புகளுக்கான பாடங்களிலும் சில பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது,’’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில், குஜராத் கலவரம், முகலாய நீதிமன்றங்கள், அவசரநிலை, பனிப்போர், நக்சல் இயக்கம் உள்ளிட்டவை குறித்த பாடங்கள் தேவையற்றது, பொருத்தமற்றது என்ற காரணங்களால் என்சிஇஆர்டி.யினால் நீக்கப்பட்டுள்ளது. பதினோராம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றிய பாடம் நீக்கப்பட்ட நிலையில், தற்போது பனிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்தும் அது நீக்கப்பட்டுள்ளது. பாட நீக்கம் குறித்த அறிவிப்பில், மகாத்மா காந்தியின் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கான காந்தியின் விருப்பம் பற்றிய பாடம் நீக்கப்பட்டது குறித்து என்சிஇஆர்டி எதுவும் குறிப்பிடவில்லை.

ஆனால் இந்த பாடங்கள் கடந்தாண்டே நீக்கப்பட்டு விட்டது. இதை மேலாட்டமாக மட்டும் பார்க்க கூடாது, என என்சிஇஆர்டி இயக்குநர் தினேஷ் சக்லானி தெரிவித்துள்ளார்.ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த கபில்சிபல், ‘’நவீன இந்தியாவின் வரலாறு 2014ம் ஆண்டில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்று மோடி ஜி நினைக்கிறார் போலும்,’’ என்று கிண்டலடித்துள்ளார்.

The post ‘காந்தி, குஜராத் கலவரம், ஆர்எஸ்எஸ் தடை’; என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களிலிருந்து நீக்கம்: ஒன்றிய அரசின் நடவடிக்கையால் சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: