18 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

சேலம், மார்ச் 28: சேலத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார். சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 348 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 51 மனுக்களும் வரப்பெற்றன.

தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ராமச்சந்திரன் என்பவருக்கு மாதந்தோறும் ரூ.4,000 உதவித்தொகை மற்றும் இலவச பேருந்து பயணச்சலுகை பெறுவதற்கான உத்தரவு ஆணையை கலெக்டர் கார்மேகம் வழங்கினார். தொடர்ந்து நேற்றைய கூட்டத்தில் காதொலி கருவி வேண்டி மனு அளித்த 2 மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக ரூ.5,500 மதிப்பிலான காதொலி கருவிகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.97,000 மதிப்பில் சிறப்பு வகை நாற்காலிகளும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.60,300 மதிப்பில் 3 சக்கர மிதிவண்டிகளும் என மொத்தம் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார். இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், டிஆர்ஓ மேனகா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், தமிழ் வளர்ச்சித்துறை மண்டிலத்துறை இயக்குநர் பவானி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: