தக்காளி விலை வீழ்ச்சி

போச்சம்பள்ளி, மார்ச் 28: போச்சம்பள்ளி பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2 வாரமாக, தக்காளி விலையில் சரிவு ஏற்பட்டது. கடந்த வாரத்தில், கிலோவிற்கு ரூ.10 முதல் ரூ.20 வரை தரத்துக்கு ஏற்ப விலை கிடைத்து வந்தது. ஆனால், நடப்பு வாரத்தில் தக்காளி விலை கிலோ ரூ.5 என சரிந்துள்ளது. இதனால் தக்காளி பயிரிட்டுள்ள போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் தக்காளி விலை வீழ்ச்சி தருணத்தில், தக்காளி பழங்களை செடிகளில் இருந்து பறிக்க செலவிடும் கூலிச் செலவினங்கள், விற்பனைக்காக வாகனங்களில் ஏற்றி செல்லும் செலவினங்கள் ஆகியவற்றை சமன் செய்யும் வகையில் கூட, தக்காளியை விற்க முடிவதில்லை. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில், விலை வீழ்ச்சி காலங்களிலும் நிரந்தர விலை என்ற சூழலை அரசு உருவாக்கி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: