நந்தம்பாக்கம் பகுதியில் ரூ.26.94 கோடியில் பாதாள சாக்கடை பணி: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

ஆலந்தூர்: ஆலந்தூர் 12வது மண்டலம் 158வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில்  நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியம் சார்பாக  நந்தம்பாக்கத்தில் ரூ.26.94 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா கோதண்டராமர் கோயில் அருகே நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சென்னை மேயர் பிரியா தலைமை வகித்தார். துணை மேயர் மகேஷ்குமார், மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன், மாமன்ற உறுப்பினர் பாரதிகுமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குனர் கிர்லோஷ்குமார் அனைவரையும் வரவேற்றார்.

அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு பாதாள சாக்கடை திட்டப் பணிக்கான கல்வெட்டினை திறந்து வைத்து பேசியதாவது: நந்தம்பாக்கம் பகுதியில் ரூ.25.94 கோடியில் பாதாள சாக்கடை திட்டத்தினை தொடக்கி வைத்துள்ளோம். அமைச்சர் தா.மோ.அன்பரசன் கேட்டுக் கொண்டது போல் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணி விரைந்து முடிக்கப்படும். நமது முதலமைச்சர் இத்துறைக்கு அதிகமான நிதியை அளித்துள்ளார். நகர்ப்புற பகுதிகளுக்கு தேவையான நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார்.

528 இடங்களில் இருந்து தண்ணீரை சுத்திகரித்து 4.5 கோடி மக்களுக்கு கொடுக்கிறோம். சென்னையில் வீடுதோறும் குடிநீர் கொடுக்கும் திட்டம் விரைவில் அறிவிக்கபட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் குடிநீர் வாரிய துணைமேலான் இயக்குனர் ராஜகோபால், ஆலந்தூர் மண்டல குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் கல்யாணி, ஆலந்தூர் வடக்கு பகுதி திமுக செயலாளர் குணாளன், திமுக நிர்வாகிகள் கருணாநிதி, நடராஜன் ஏசுதாஸ், டில்லிபாபு, சாலமோன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: