கூவம் ஆற்றுப்படுகை, மெரினாவில் ரூ.2.20 கோடியில் கேமரா: பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் நேற்று வெளியிடப்பட்ட பட்ஜெட் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களிலும் தூர்வாரும் பணி சென்னை மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து ரூ.35 கோடியும் மற்றும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைப்பின் கீழ் கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில், ஆசிய வளர்ச்சி வங்கி திட்ட நிதியிலிருந்தும் ரூ.20 கோடி மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் ரூ.55 கோடி மதிப்பீட்டில் 2023-24ம் நிதியாண்டில் தொடர்ந்து தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பூங்கா:

 * 2023-24ம் நிதியாண்டிலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலையோரங்கள், திறந்த வெளிகள், பூங்காக்கள் ஆகிய இடங்களில் 2.50 லட்சம் மரக்கன்றுகளை தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் நடப்படும்.

* சென்னை மாநகராட்சியில் 2023-24ம் நிதியாண்டில் 584 பூங்காக்களை, குறைந்த செலவிலும், அதிக செயல்திறனுடனும், நல்ல நிலையில் பராமரிக்க, புதிதாக வடிவமைக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறையின்படி ஒப்பந்ததாரர் மூலம் ரூ.48 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும்.

* 2021-22 மற்றும் 2022-23ம் நிதியாண்டில் 68 விளையாட்டு திடல்கள் மேம்படுத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 2023-24ம் ஆண்டில், ரூ.500 லட்சம் மதிப்பீட்டில் 25 விளையாட்டு திடல்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்படும்.

* 2023-24ம் நிதியாண்டில் 70 எண்ணிக்கையிலான சாலை மைய தடுப்புகளை அழகுப்படுத்தி, பராமரிக்க அரசு சாரா நிறுவனங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்டிடம்:

* மண்டலம் 8, வார்டு 102, அண்ணாநகர் வேலங்காடு மயான பூமியில் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில், பொது-தனியார் கூட்டு முறையில் முன்னோடி திட்டமாக உயிர் நீத்தோரின் உடல்களை பாதுகாக்கும் அறை உரிய கட்டமைப்புகளுடன் அமைக்கும் பணி 2023-24ம் நிதியாண்டில் துவங்கப்படும்.

* 2023-2024-ஆம் நிதியாண்டில் புதிய கட்டடங்களில், 11 மாநகர ஆரம்ப சுகாதார மையங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

* சிந்தாதிரிப்பேட்டை பகுதியில், ரூ.269 லட்சம் மதிப்பீட்டிலும், மண்டலம் 13ல் பெசன்ட் நகர் பகுதியில், ரூ.80 லட்சம் மதிப்பீட்டிலும், 2023-24ம் நிதியாண்டில் சிங்கார சென்னை திட்ட நிதி மற்றும் இதர நிதியின் வாயிலாகவும், நவீன மீன் அங்காடி அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

* மண்டலம் 6ல் பெரம்பூர் - புளியந்தோப்பு பகுதியில் உள்ள இறைச்சி கூடத்தினை நவீன முறையில் மேம்படுத்தி, தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பொது மக்களின் பயன்பாட்டிற்கு வெகுவிரைவில் கொண்டுவரப்படும்.

* பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் 35 எண்ணிக்கையிலான வணிக வளாகங்கள் மற்றும் 63 எண்ணிக்கையிலான சமுதாய நல கூடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த வணிக வளாகங்கள் மற்றும் சமுதாய நல கூடங்களை சிறந்த முறையில் பராமரிக்க 2023-24ம் நிதியாண்டில் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் மயான பூமிகளில் உள்ள காலி நிலங்களை பசுமையாக இருக்கும் வண்ணம் புல்வெளிகள், பூச்செடிகள் அமைத்தல் மற்றும் மயான பூமிகளின் வளாகங்களை அழகுப்படுத்திட ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

நிலம் மற்றும் உடைமைத்துறை:

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநகரத்திலிருந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் பெயரில் உள்ள 5,786 நிலங்களின் பட்டியல்கள் பெறப்பட்டுள்ளது. இந்நிலங்களின் அளவீடு மற்றும் எல்லைகளை நிர்ணயம் செய்து ஆக்கிரமிப்புகள் ஏதும் இருப்பின், அவற்றை அகற்றி, சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாக்கும் பொருட்டு தொழில் நுட்ப பிரிவுடன் இணைந்து, தனியார் மூலமாக இப்பணியினை முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி, வடக்கு வட்டார பகுதிகளில் 2023-24ம் ஆண்டில் செயல்படுத்தப்படும்.

மின்சாரம்:

மாநகராட்சி மன்றக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள, கலந்தாலோசனை ஒலிபெருக்கி அமைப்பை அனலாக் முறையிலிருந்து டிஜிட்டல் முறைக்கு ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் மாற்றியமைக்கப்பட்டு நவீனமயமாக்கப்படும். மெரினா கடற்கரை, அண்ணா நகர் டவர் பூங்கா, கூவம் ஆற்றுப்படுகை, அடையாறு ஆற்றுப்படுகைகளில் கேமராக்கள் அமைக்கும் பணி ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

தகவல் தொழில்நுட்ப மையம்:

சொத்துவரி பெயர் மாற்றம் சான்று பதிவிறக்கம் செய்து கொள்ள இணைய வழி வசதி அறிமுகப்படுத்தப்படும். பொதுமக்கள் நலன் கருதி, சொத்துவரி மேல்முறையீட்டினை இணையதளம் வழி நடைமுறைபடுத்த வழிவகை செய்யப்படும். பொதுமக்கள், 2023-24ம் நிதியாண்டு முதல் சமூக நல கூடங்கள், வணிக வளாகங்களை பயன்படுத்திட, இணையவழி வாயிலாக முன்பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Related Stories: